#BREAKING பொதுமக்களுக்கு குட்நியூஸ்.. தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளிலும் ரெம்டெசிவிர் மருந்து விநியோகம்.!

By vinoth kumarFirst Published May 16, 2021, 1:43 PM IST
Highlights

தமிழகம் முழுவதும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கு அந்தந்த மருத்துவமனைகள் மூலம் ரெம்டெசிவிர் மருந்து வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

தமிழகம் முழுவதும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கு அந்தந்த மருத்துவமனைகள் மூலம் ரெம்டெசிவிர் மருந்து வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனையில் சுகாதாரத்துறை அமைச்சர், சுகாதாரத்துறை செயலாளர், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் தனியார் மருத்துவமனைகளிலும் ரெம்டெசிவிர் மருந்து விநியோகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்:- வருகிற செவ்வாய்க்கிழமை முதல் தமிழகத்திலுள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளும், தமது மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் குறித்த விவரங்களோடு, ரெம்டெசிவிர் மருந்து தேவை குறித்த தமது கோரிக்கைகளை இணையதளத்தில் பதிவிடும் வசதி ஏற்படுத்தப்படும். 

இந்தக் கோரிக்கைகளைப் பரிசீலித்து இந்த மருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டபின், அந்த மருத்துவமனையின் பிரதிநிதிகள் மட்டும், அவர்களுக்கான விற்பனை மையங்களுக்குச் சென்று ஒதுக்கீடு செய்யப்படும் மருந்துகளைப் பெற்றுக் கொள்ளலாம். இதற்கான இணையதளம் குறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்.

இவ்வாறு வழங்கப்படும் மருந்துகள் தகுதியான நோயாளிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுவதையும், பெறப்படும் அதே விலையிலேயே நோயாளிகளுக்கு அவை விற்பனை செய்யப்படுவதையும், தவறான முறையில் கள்ளச்சந்தையில் இவை விற்பனை செய்யப்படாதவாறும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிப்பார்கள். நோயாளிகளுக்குத் தேவையற்ற முறையில் மருந்துச் சீட்டு அளிக்கும் மருத்துவமனைகள் மீதும், மேற்கூறிய விதிமுறைகளை மீறுவோர் மீதும், சட்டப்படியான நடவடிக்கைகளை மக்கள் நல்வாழ்வுத் துறை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!