அதிருப்தியில் பிரேமலதா..! டென்சனில் எல்.கே.சுதீஷ்...! அதிமுக – தேமுதிக கூட்டணி அமையுமா?

By Selva KathirFirst Published Mar 1, 2021, 11:29 AM IST
Highlights

கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கு தங்களை மிகவும் தாமதமாக அழைத்ததாக பிரேமலதா விஜயகாந்த் அதிருப்தியில் இருப்பதாக கருதப்படும் நிலையில், வந்த வாய்ப்பை விட்டுவிடக்கூடாது என்கிற டென்சனில் எல்.கே.சுதீஷ் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கு தங்களை மிகவும் தாமதமாக அழைத்ததாக பிரேமலதா விஜயகாந்த் அதிருப்தியில் இருப்பதாக கருதப்படும் நிலையில், வந்த வாய்ப்பை விட்டுவிடக்கூடாது என்கிற டென்சனில் எல்.கே.சுதீஷ் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

பாமகவுடன் தொகுதிப் பங்கீட்டை முடித்த கையோடு பாஜகவுடன் அதிமுக தலைமை கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது. இதன் பிறகு தேமுதிகவை அதிமுக தலைமை கூட்டணிப் பேச்சுக்கு தொடர்பு கொண்டது. ஆனால் பேச்சுவார்த்தை நடத்தும் முக்கிய நபரான எல்.கே.சுதீஷ் சென்னையில் இல்லை. எனவே சனிக்கிழமை அன்று அதிமுக – தேமுதிக இடையிலான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்க முடியவில்லை. ஆனால் அதிமுக தலைமையிடம் இருந்து அழைப்பு வந்த நிலையில் பிரேமலதா அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் வழக்கம் போல் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டி என்கிற ரீதியில் பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார்.

ஆனால் இதனை பொருட்படுத்தாமல் அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் விஜயகாந்த் வீட்டிற்கு நேரில் சென்று அவரை சந்தித்தனர். இதன் முலம் தேமுதிக – அதிமுக பேச்சுவார்த்தை தொடங்கியதாக தகவல்கள் கசியவிடப்பட்டன. ஆனால் விஜயகாந்துடன் கூட்டணி தொடர்பாக அமைச்சர்கள் எதுவும் பேசவில்லை என்றும், கூட்டணியை உறுதிப்படுத்துவிட்டு மட்டுமே சென்றதாக சொல்கிறார்கள். வழக்கமாக திரைமறைவில் பேச்சுவார்த்தையை முடித்துவிட்டு பிறகு நேரடியாக செல்வது தேமுதிக வழக்கம். அந்த வகையில் எத்தனை தொகுதிகள் என தேமுதிக தரப்பு பேச்சுவார்த்தையை முன்னெடுத்த போது நேரில் பேசிக் கொள்ளலாம் என அதிமுக தரப்பில் பதில் அளித்ததாக கூறுகிறார்கள்.

மேலும் அதிமுக பேச்சுவார்த்தைக்கு அழைத்த பிறகும் கூட எல்.கே.சுதீஷ் தனது வெளியூர் சுற்றுப்பயணத்தில் இருந்து சென்னை திரும்பவில்லை. இதற்கு காரணம் பிரேமலதா என்கிறார்கள். பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டாம் என்று சுதீசுக்கு பிரேமலதா உத்தரவிட்டதாக கூறுகிறார்கள். இதனை அடுத்தே முன்னாள் எம்எல்ஏவும், தேமுதிக மாநில துணைச் செயலாளருமான பார்த்தசாரதி தலைமையில் தேமுதிக நிர்வாகிகள் அமைச்சர் தங்கமணி வீட்டிற்கு சென்றுள்ளனர். அவர்களிடம் அதிமுக தரப்பில் இருந்து தெளிவாக ஒரு விஷயம் கூறப்பட்டுள்ளது.

இந்த முறை தேமுதிகவிற்கு 11 தொகுதிகளை தாண்டி ஒரு தொகுதி கூட கொடுக்க முடியாது என்பது தான அந்த விஷயம். இதனை முன்கூட்டியே தேமுதிக குழு தெரிந்து வைத்திருந்தது. அதனால் அமைச்சர்கள் கூறிய போது அதை கேட்டு தேமுதிகவினர் ஷாக் எல்லாம் ஆகவில்லை. மாறாக தங்களுக்கு பாமகவிற்கு கொடுக்கும் தொகுதிகளுக்கு இணையான தொகுதிகள் வேண்டும் என்று தேமுதிக தரப்பில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 முதல் இரண்டு வருடங்களாக தேமுதிக அதிமுகவுடன் கூட்டணியில் உள்ளதை சுட்டிக்காட்டியுள்ளனர் தேமுதிக குழுவினர். அத்தோடு இடைத்தேர்தலில் அதிமுகவிற்காக பிரேமலதா பிரச்சாரம் செய்ததையும், ராமதாஸ் பிரச்சாரம் செய்யாததையும் அவர்கள் எடுத்துக்கூறியுள்ளனர்.

ஆனால் தேமுதிகவிற்கு 9 தொகுதிகள் என்பதை தாண்டி தங்களால் 11 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முடியும் என்றும் கூட்டணிக்கட்சிகளுக்கு இந்த முறை தாராளம் காட்ட முடியாது என்றும் அதிமுக பிடிவாதமாக கூறியுள்ளது. இதனால் முதல்கட்ட பேச்சுவார்த்தை எவ்வித முடிவும் எட்டப்படாமல் முடிந்துள்ளது. பேச்சுவார்த்தையின் போது தேமுதிகவிற்கு வெறும் 11 தொகுதிகள் என்று அதிமுக கூறியதை பிரேமலதா சுத்தமாக ரசிக்கவில்லை என்கிறார்கள். இதனால் ஏற்பட்ட அதிருப்தியால் பிரேமலதா என்ன முடிவு  வேண்டுமானாலும் எடுப்பார் என்கிறார்கள். ஆனால் சுதீஷோ, தற்போதைய சூழலில் சில எம்எல்ஏக்களை பெற வேண்டிய கட்டாயம் கட்சிக்கு இருப்பதாக கருதுகிறார்.

எனவே கடந்த காலங்களை போல் அவசரப்பட்டு பிரேமலதா முடிவெடுத்துவிட்டால் கட்சி நடத்துவதே கஷ்டமாகிவிடும் என்று சுதீஷ் டென்சனில் இருப்பதாக சொல்கிறார்கள்.
 

click me!