தகுதி நீக்க வழக்கு... அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துமா? நாளை மறுநாள் தீர்ப்பு?

By vinoth kumarFirst Published Oct 22, 2018, 5:01 PM IST
Highlights

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நாளை மறுநாள் தீர்ப்பு வழங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தமிழக அரசியலில் பெரும் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நாளை மறுநாள் தீர்ப்பு வழங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தமிழக அரசியலில் பெரும் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த வழக்கின் தீர்ப்பின் மூலம் எடப்பாடி கை ஓங்குமா? அல்லது தினகரன் கை ஓங்குமா? என்ற எதிர்பார்ப்புடன் அரசியல் கட்சியினர் உற்றுநோக்கி வருகின்றனர்.  

முதல்வர் எடப்பாடி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரவேண்டும் என டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.-க்கள் 19 பேர் ஆளுநரிடம் மனு கொடுத்தனர். இதைத் தொடர்ந்து, இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு தலைமை கொறடா ராஜேந்திரன் சட்டப் பேரவைத் தலைவர் தனபாலிடம் புகார் தெரிவித்திருந்தார். இதனையடுத்து 19 எம்.எல்.ஏக்களும் விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பினார். சட்டப்பேரவை உறுப்பினர் ஜக்கையன் மட்டும் பேரவைத் தலைவர் முன் ஆஜராகி விளக்கம் அளித்தார். 

மற்றவர்கள் ஆஜராகவில்லை. இதையடுத்து, டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து பேரவைத் தலைவர் தனபால் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் 2017-ம் ஆண்டு செப்டம்பர் 18-ம் தேதி வழக்குத் தொடுத்தனர். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி எம்.துரைசாமி, உயர்நீதிமன்றம் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை 18 தொகுதிகள் காலியாக இருப்பதாகவோ, அந்தத் தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிப்போ வெளியிடக் கூடாது என்று உத்தரவிட்டிருந்தார். 

தொடர்ந்து இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் பல மூத்த வழக்குரைஞர்கள் ஆஜராகி வாதிட்டனர். பிறகு இரண்டு நீதிபதிகள் மாறுப்பட்ட தீர்ப்பை வழங்கினர். சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு செல்லும் என்றும், 18 தொகுதிகளிலும் தேர்தலை நடத்தலாம் என்றும் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தீர்ப்பளித்தார். அதே சமயம், 18 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்தது செல்லாது என்று மற்றொரு நீதிபதி சுந்தர் தனது மாறுபட்ட தீர்ப்பை கடந்த ஜூன் 14-ம் தேதி வழங்கினர். 

இரண்டு நீதிபதிகள் மாறுப்பட்ட தீர்ப்பை வழங்கியதால், வழக்கு 3-வது நீதிபதிக்கு மாற்றப்பட்டது. மூன்றாவது நீதிபதி முன்பு தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்கள் தரப்பில் மூத்த வழக்கறிரைஞர்கள் மோகன் பராசரன், பி.எஸ்.ராமன் ஆகியோரும், சபாநாயகர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம், முதல்வர் தரப்பில் மூத்த வழக்குரைஞர் சி.எஸ்.வைத்தியநாதன், அரசு தலைமை கொறடா தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோதஹ்கி ஆகியோர் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனர். 

இதனையடுத்து வழக்கு ஆகஸ்ட் 31-ம் தேதி அன்று வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு வரும் 24-ம் தேதி, அதாவது நாளை மறுநாள் தீர்ப்பு வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த வழக்கின் தீர்ப்பு தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

click me!