திரைப்படங்களுக்கு வரிவிலக்கு அளிக்கும் குழு அமைப்பதில் நேர்மை தேவை.. சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு.

By Ezhilarasan BabuFirst Published Jul 9, 2021, 4:37 PM IST
Highlights

மேலும், ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனத்துக்கு அதிகாரிகள் பாகுபாடு காட்டியது உறுதியாகியுள்ளதாக தெரிவித்த நீதிபதி, இது போன்று நிபுணர் குழுவை நியமிக்கும் போது உரிய தகுதி அடிப்படையில் பெண்களும், ஆண்களும் தேர்வு செய்யபட வேண்டும் எனவும்  பெண்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் தரபட்டு வெளிப்படை தன்மையாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

திரைபடங்களுக்கு வரிவிலக்கு அளிக்கும் குழு அமைப்பதில் ஒரு தலைபட்சமாக செயல்படுவதோ, ஊழலுக்கு வழி வகுக்கவோ இடம் தராத வகையில் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

தமிழில் பெயர் வைக்கும் திரைப்படங்களுக்கு கேளிக்கை வரி விலக்கு அளிப்பது தொடர்பாக ஆய்வு செய்ய கடந்த ஜனவரி 2012 ஆம் ஆண்டு நிபுணர் குழு அமைக்கப்பட்டது. இந்த நிலையில், தனது திரைபடங்களுக்கு விலக்கு அளிப்பது தொடர்பாக பாகுபாடு காட்டபட்டு வருவதாக கூறி ரெட் ஜெயிண்ட் மூவிஸ் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தங்களது நிறுவனம் தயாரித்த படங்களுக்கு வரி விலக்கு கோரி ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தை அணுக வேண்டிய சூழல் உள்ளதாகவும்,  மனுதாரரின் நிறுவனம் உதயநிதி ஸ்டாலினுக்கு சொந்தமானது என்பதால் மட்டுமே வரி விலக்கு அளிப்பதில் வேண்டுமென்றே பாகுபாடு காட்டபட்டுள்ளதாக தெரிவித்தார். 

வணிக வரி துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரர் எந்த குறிப்பிட்ட குற்றசாட்டையும் கூறாமல் நிபுணர் குழுவின் செயல்பாடுகளை விமர்சித்துள்ளதாக தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த குழுவில்  ஆளும் கட்சிகளுக்கு வேண்டபட்டவர்கள் மட்டுமே பெரும்பாலும் இடம் பெற்றுள்ளதாக குறிப்பிட்டார். மேலும், இது போன்று பாகுபாடு காட்டுதல், ஒரு சார்பு நிலையெடுத்தல் என்பது நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்திவிடும் எனவும் தெரிவித்தார். இது போன்ற குழுக்களை அமைக்கும்போது அரசியலமைப்பிற்கு எதிரான நடைமுறைகள் இருந்தால் அதனை அரசு இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் எனவும் நீதிபதி அறிவுறுத்தினார். 

மேலும், ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனத்துக்கு அதிகாரிகள் பாகுபாடு காட்டியது உறுதியாகியுள்ளதாக தெரிவித்த நீதிபதி, இது போன்று நிபுணர் குழுவை நியமிக்கும் போது உரிய தகுதி அடிப்படையில் பெண்களும், ஆண்களும் தேர்வு செய்யபட வேண்டும் எனவும்  பெண்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் தரபட்டு வெளிப்படை தன்மையாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், திரைபடங்களுக்கு கேளிக்கை வரி விலக்கு அளிப்பதற்காக அமைக்கப்படும் குழு பாரபட்சம் இல்லாத, ஊழலற்ற நியமனங்களாக இருப்பதை உறுதி செய்ய  குழுவின் ஒட்டுமொத்த நடவடிக்கைகளையும் மாற்றி அமைக்கும் வகையில் கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

 

click me!