’கொளத்தூர் மணியை விமர்சிக்க கெளசல்யாவைத் தவிர ஒரு வெங்காயமும் கிடைக்கப்போவதில்லை’...இன்னொரு பஞ்சாயத்து கூட்டும் இயக்குநர்...

By Muthurama LingamFirst Published Jan 3, 2019, 3:49 PM IST
Highlights

அதன் பிறகு அதைப் பற்றி எந்த தகவலும் இல்லாமல் இருந்தது. தியாகு, கொளத்தூர் மணி வெளியிட்டதாக அறிக்கை ஒன்று வெளியான போது அதன் மீதும் சந்தேகம் எழுந்தது. இது உண்மைதானா அல்லது வழக்கம்போல் வதந்தியா என்று. அவர்கள் மறுப்பேதும் சொல்லாததால் உண்மைதான் என்று உணர முடிந்தது.


கெளசல்யா மறுமணம், அவரது காதல் கணவர் சக்தியின் திருவிளையாடல்கள் என்ற பெயரில் இணையங்களில் வடிவேலு மீம்ஸ் வரை வந்துவிட்டார்கள். போதாக்குறைக்கு அவர்கள் விவகாரத்தில் தியாகு, கொளத்தூர் மணி ஆகியோர் செய்துவைத்ததாகச் சொல்லப்படும் கட்டப்பஞ்சாயத்து வேறு இன்னொரு பக்கம் களைகட்டி வருகிறது.

இந்நிலையில் தியாகுவை என்ன காரணத்துக்காகவோ ஒரு ஓரமாக உட்காரவைத்துவிட்டு, கொளத்தூர் மணிக்கு மட்டும் வக்காலத்து வாங்க வந்திருக்கிறார் ‘வெங்காயம்’ மற்றும் ‘ஒன்’ படங்களின் இயக்குநர் சங்ககிரி ராச்குமார்... இதோ அவரது காட்டமான கருத்து...

...கௌசல்யா மறுமணத்தின் போது அவரது கணவரைப் பற்றி வந்த செய்திகள் வதந்திகளாக இருக்கலாம் என்று தோன்றியது. அவர் மீது வயிற்றெரிச்சலில் இருப்பவர்கள் கிளப்பி விட்டதாக இருக்கும் என்று கடந்து சென்றோம்.

அதன் பிறகு அதைப் பற்றி எந்த தகவலும் இல்லாமல் இருந்தது. தியாகு, கொளத்தூர் மணி வெளியிட்டதாக அறிக்கை ஒன்று வெளியான போது அதன் மீதும் சந்தேகம் எழுந்தது. இது உண்மைதானா அல்லது வழக்கம்போல் வதந்தியா என்று. அவர்கள் மறுப்பேதும் சொல்லாததால் உண்மைதான் என்று உணர முடிந்தது ( இது போன்ற முக்கியமான அறிக்கைகளை இனி வீடியோ பதிவுகளாக போடுவதே சிறந்ததாக இருக்கும் ஏனென்றால் அவரவர் வசதிக்கு தகுந்தாற்போல வரிகளை மாற்றிக் கொள்ளும் அபாயமும் இருக்கிறது.)

பாதிக்கப்பட்டவர்கள் யாரும் காவல் நிலையத்தையோ நீதிமன்றத்தையோ அணுக முயற்சிக்கவில்லை. அப்படி அணுகி இருந்தாலும் நீதிமன்றம் இதுபோன்ற எத்தனையோ விசித்திரமான வழக்குகளை சந்தித்திருக்கிறது. அதைவிட விசித்திரமான தீர்ப்புகளையும் தந்திருக்கிறது. அப்படியே வழக்கு தொடர்ந்து இருந்தாலும் குற்றம்சாட்டப்பட்ட சக்தி என்பவர், தான் நிரபராதி என்றும் .. தன் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது என்றும் மீடியா முன் வந்து ஆவேசமாக பேட்டி கொடுத்துவிட்டு சென்றிருப்பார். அதற்கென்றே பிறந்திருக்கின்ற அறிவார்ந்த வழக்கறிஞர்களை கொண்டு ஆண்டுக்கணக்கில் வழக்கை இழுத்தடித்திருப்பார்கள். ஒருவேளை இந்த வழக்கு நேர்மையாக நடத்தப்பட்டு தீர்ப்பே வந்திருந்தாலும் அது எப்படிப்பட்டதாக இருந்திருக்கும் என்பது யூகிக்க முடியவில்லை. 

இன்று கட்டப்பஞ்சாயத்து செய்ததாக விமர்சிக்கப்பட்டு கொண்டிருக்கும் கொளத்தூர் மணி அவர்களை தவிர வேறு எந்த வெங்காய தலைவனாவது அந்த திருமணத்தை முன்னின்று நடத்தி இருந்தாலும், இந்தப் பிரச்சனைகளை மூடி மறைக்கத்தான் பார்த்திருப்பார்கள். ஏனென்றால் இங்கே சில தலைவர்களின் மீது கூட அது போன்ற குற்றச்சாட்டுகள் இருக்கிறது.

குற்றம் சாட்டப்பட்டவர் இன்று பொதுவெளியில் அம்பலப்பட்டு நிற்பதை விட கடுமையான தண்டனையை எந்த நீதிமன்றமும் கொடுத்திருக்க முடியாது.

தாம் முன்னின்று நடத்திய காரணத்திற்காகவே அதை தானே முன்வந்து செய்திருக்கிறார். இத்தனைக்கும் இது இவர்கள் ஏற்பாடு செய்த திருமணமோ மணமக்களோ அல்ல. அவர்களாகவே முடிவு செய்து கொண்டு இவர்களை முன்னின்று நடத்தி வைக்க சொல்லி இருக்கிறார்கள் அவ்வளவுதான்.

சட்டத்தை யார் வேண்டுமானாலும் கையில் எடுத்துக்கொள்ள முடியுமா?. முடியாதுதான். ஆனால் இது தாங்கள் நடத்தி வைத்த திருமணம் என்கிற முறையில் அதைப் பற்றி விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், அதைப்பற்றி சம்பந்தப்பட்டவர்கள் யாரும் புகார் கொடுக்காத நிலையிலும் கூட அதைப் பற்றி விசாரிப்பதும், அதை நேர்மையாக வெளிப்படுத்துவதும், இனிமேல் இதுபோன்று நடந்து விடாமல் தடுக்க வேண்டியதும்.. தனது கடமை என்று எண்ணியிருக்கிறார்கள்.

கட்டப்பஞ்சாயத்து என்பது தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு சாதகமாக பேசுவது. இங்கே தாங்கள் தூக்கி கொண்டாடியவர்களை நேர்மையாக அம்பலப்படுத்தியிருக்கிறார்கள். முற்போக்கு சிந்தனைவாதிகளை குற்றம் சொல்வதற்காகவே ஒரு பெரும் கூட்டம் காத்துக் கிடப்பதை தெரிந்தும் அவர்களால் வரவிருக்கும் விமர்சனங்களைப் பற்றி எல்லாம் கவலை கொள்ளாமல் நேர்மையாக /தனது ஆற்றலை வியப்புடன் மதிப்போரை அதனைக் கொண்டே மடக்கும் போக்கு சக்தியிடம் இருந்திருக்கிறது/ என்று போட்டுடைக்கிறார்கள்.

சட்டத்திற்குப் புறம்பாக கூட நடந்து கொள். ஆனால் நியாயத்திற்குப் புறம்பாக ஒருபோதும் நடந்து கொள்ளாதே என்பவர் கொளத்தூர் மணி. இதற்கு முன் அவரை விமர்சிப்பதற்கு உங்களிடம் ஒரு வெங்காயமும் இருந்ததில்லை. இனி மேலும் கிடைக்காமலும் போகலாம். இதை கெட்டியாக பிடித்துக் கொள்ளுங்கள்.

எப்படி, பெரியாரை விமர்சிப்பதற்கு அவர் மணியம்மையாரை திருமணம் செய்து கொண்டதைத் தவிர வேறு எதுவும் கடைசிவரை உங்களுக்கு கிடைக்கவே இல்லையோ அதைப்போல.. கொளத்தூர் மணி அவர்களை விமர்சிக்கவும் இனி வேறு எதுவும் கிடைக்காமல் போகலாம். விமர்சித்து கொண்டிருந்தவர்களை இன்னும் அதிகமாக விமர்சிக்கவும், நேசித்துக் கொண்டிருந்தவர்களை இன்னும் ஆழமாக நேசிக்கவும் வைத்திருக்கிறார்.

click me!