
ரஜினிகாந்த் தனது அரசியல் என்ட்ரி குறித்து அறிவிக்க வேண்டும் என்றும் அதை நான் மிகவும் எத்ர்பார்த்துக் காத்திருக்கிறேன் என்றும் இயக்குநர் மகேந்திரன் தெரிவித்தார்.
நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை இரண்டாவது கட்டமாக இன்று முதல் சந்திக்கிறார். ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் நோக்கில் நடைபெறும் இந்தச் சந்திப்பு, வரும் 31-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. ரஜினிகாந்த் அரசியல் அறிவிப்பை வெளியிடுவார் என்று அவரது ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து உள்ளனர்.
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனது ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இந்த சந்திப்பு நடைபெற்று வருகிறது. தேசிய கீதம் இசைக்கப்பட்டு நிகழ்ச்சி துவங்கியது.
பின்னர், ஓகி புயலால் உயிரிழந்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ரஜினியுடன் தயாரிப்பாளர் கலைஞானம் மற்றும் இயக்குநர் மகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் முதலில் பேசிய தயாரிப்பாளர் கலைஞானம் , அதிர்ஷ்டம் வரும் போது யாரும் குறுக்கே நிற்க முடியாது. ரஜினி வீட்டில் இப்போது சுக்ரன் உட்கார்ந்து இருக்கிறார்; அருணாச்சலம் படத்தில் என்னையும் ஒரு தயாரிப்பாளராக்கியவர் ரஜினி” என்றார்.
இதைத்தொடர்ந்து பேசிய இயக்குநர் மகேந்திரன் ரஜினியிடம் தனக்கு பிடித்தது பிடித்தது நிதானம் என கூறினார். நிதானம் உள்ளவர்கள்தான் ஜெயித்து சாதனை படைக்கின்றனர் என கூறினார்.
யாரும் வருத்தப்படும்படி நடிகர் ரஜினி நடந்து கொள்ளமாட்டார்; நிதானம் உள்ளவர்கள்தான் ஜெயித்து சாதனை படைக்கின்றனர். ரஜினியின் அரசியல் அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் என மகேந்திரன் தெரிவித்தார்.
ரஜினி என்ன சொல்லப்போகிறார் என்பதை அறிய பொறுமை அவசியம். தலைவராக இருப்பவருக்கு நல்லது கெட்டதை சீர்தூக்கி பார்க்கும் மனோபாவம் தேவை. ஒரு நேர்மையான தலைவனுக்கு உள்ள அத்தனை குணாதிசயங்களும் ரஜினிக்கு உள்ளது என்று இயக்குனர் மகேந்திரன் தெரிவித்தார்.