
ரஜினி அரசியலுக்கு வருவது தமிழக மக்களை முட்டாளாக்கும் செயல் என்றும், ரஜினி எங்கள் மண்ணைச் சேர்ந்தவர் இல்லை என்றும், பாபா எங்கள் கடவுள் இல்லை என்றும் இயக்குநர் கவுதமன் கூறியுள்ளார்.
அரசியலுக்கு வருவது உறுதி, இது காலத்தின் கட்டாயம் வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் நான் தனிக்கட்சி ஆரம்பித்து 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன் என்றும் வரும் உள்ளாட்சி தேர்தலுக்கு நேரமில்லாததால் போட்டியிடவில்லை என்றும் நடிகர் ரஜினிகாந்த், அரசியலுக்கு வருவது குறித்து அவர் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
உண்மை, உழைப்பு, உயர்வு இதுதான் தாரக மந்திரம். நல்லதே நினைப்போம். நல்லதே செய்வோம். நல்லதே நடக்கும். இதுதான் நமது கொள்கை. வரும் தேர்தலில், நம்ம படையும் இருக்கும் என்று ரஜினிகாந்த் கூறினார். ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து, பல்வேறு கட்சி தலைவர்கள் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்கு இயக்குநர் கவுதமன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ரஜினி அரசியலுக்கு வருவது தமிழக மக்களை முட்டாளாக்கும் செயல் என்று கூறியுள்ளார்.
ரஜினியின் இந்த அரசியல் அறிவிப்பு தமிழக மக்களின் காதில் பூ சுற்றும் செயல் என்றும் கவுதமன் கண்டனம் தெரிவித்துள்ளார். எங்களுக்காக எங்கள் மண்ணில் உருவான ஆன்மீகவாதி வள்ளார். சாதி மதம் இருக்கக்கூடாது என்றவர் வள்ளலார் என்ற கவுதமன், ரஜினி எங்கள் மண்ணைச் சேர்ந்தவர் இல்லை என்றும் பாபா எங்கள் கடவுள் இல்லை என்றும் கூறினார்.
தமிழ் மண்ணுக்கு சம்பந்தம் இல்லாத ரஜினி எப்படி தமிழ் மக்களுக்காக போராடுவார்? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டபோது வாய் திறக்கவில்லை; ஓகி புயலால் மீனவர்கள் பாதிக்கப்பட்போது, தனது நண்பர் பிரதர் மோடியிடம் பேசி ரஜினி உதவி கேட்கவில்லை என்று கவுதமன் குற்றம் சாட்டினார்.
பிரதமர் மோடியிடம் பேசி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கூற வேண்டியதுதானே என்று கேள்வி எழுப்பிய கவுதமன், ரஜினியை பின்னால் இருந்து இயக்குவது பாஜகதான் என்றும் குற்றம் சாடினார். நடிகர் ரஜினிகாந்த், தமிழக மக்கள் மீது போர் பிரகடனம் செய்துள்ளதாகவும் இயக்குநர் கவுதமன் கூறினார்.