யாருங்க அந்த அவரு...இவரு, ஆஹ்ங் நரேந்திர மோடி!: வாயை கொடுத்து வாங்கிக் கட்டும் திண்டுக்கல் சீனி

First Published Sep 23, 2017, 12:31 PM IST
Highlights
dindukkal seenivasan simply speaking something and getting feedback from modi


தமிழ் தெரிந்தோர் வாட்ஸ் ஆப்களில் எல்லாம் திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சுதான் இப்போது பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. 

”அய்யா உங்ககிட்டேயெல்லாம் பெரிய மன்னிப்பு கேட்கிறோம், மன்னிச்சுக்குங்க. அம்மாவை அப்பல்லோவில் பார்த்தோம், அவஙக் இட்லி சாப்பிட்டாங்க, சட்னி சாப்பிட்டாங்க என்று நாங்க சொன்னதெல்லாம் பொய்யி. அவன் பார்த்தான், இவன் பார்த்தான்னு பேசுனதெல்லாம் பொய்யி. யாருமே பார்க்கலை. கட்சி ரகசியம் வெளியில போயிடக்கூடாதுங்கிறதுக்காக பொய் சொன்னோம். அன்னைக்கு இருந்த சூழ்நிலை அப்படி, வேற வழியில்லை.” என்று மதுரை பழங்காநத்தத்தில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் உண்மையை போட்டுடைத்திருக்கிறார் சீனிவாசன். 

தாங்கள் மட்டுமில்லை வெங்கய்யா நாயுடு, அருண்ஜெட்லி என்று யாரையும் உள்ளே விடலை என்று ஒலி பெருக்கியில் ஓவராய் குமுறிக் கொட்டியிருக்கிறார் சீனி. 

இந்த திடீர் பாய்ச்சலுக்கு காரணம், ‘ஜெயலலிதாவின் இறப்பு குறித்த பல உண்மைகள் வெளியானால் முதலில் ஜெயிலுக்கு போகப்போவது திண்டுக்கல் சீனிவாசன் தான்.’ என்று தினகரன் தரப்பு பரப்பிக் கொண்டே இருப்பதுதான் என்கிறார்கள். அதை மெய்ப்பிக்கும் விதமாக ‘நான் ஏன் உள்ளே போகணும்? பார்வையாளனா போனது ஒரு குற்றமா? அதுக்காக உள்ளே தள்ளுவாங்களா!’ என்று நியாயம் கேட்டிருக்கிறார். 

சீனிவாசனின் இந்த பேச்சு அ.தி.மு.க. தலைமை நிர்வாகிகள் மத்தியில் பெரும் அதிருப்தியைக் கிளப்பியிருக்கிறது என்று சொல்கிறார்கள். என்னதான் தன் பேச்சின் ஊடே ‘சசிகலாவும், அவரது குடும்பமும் மட்டும்தான் உள்ளே போய் பார்த்தார்கள்.’ என்று ஜெயலலிதாவின் மருத்துவமனை காலங்களின் முழு சாட்சி சசிதான் என்று பந்தை அங்கே தள்ளிவிட்டுவிட்டாலும் கூட, சீனியின் இந்த சீற்றம் பல பகீர் பக்கவாட்டு விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்றே தகவல்கள் வருகிறது. 

அப்பல்லோவில் அட்மிட் ஆகியிருந்த அம்மாவை பார்க்க முடியாமல் போனது தாங்கள் மட்டும்தான் என்றளவில் பேச்சை அவர் முடித்திருந்தாலும் கூட பரவாயில்லை! ஆனால் மத்திய அரசின் முக்கிய தலைகளையும் இந்த வாக்குமூலத்தில் இழுத்துவிட்டது என்னவிதமான ரியாக்‌ஷன்களை அங்கிருந்து கொண்டு வந்து கொட்டுமோ! என்று குழம்புகிறது எடப்பாடி அண்ட்கோ. சீனியர் அமைச்சர் பட்டியலில் இருக்கும் சீனிவாசன் பிரதமர் மோடியின் பெயரை கூட சட்டென்று உச்சரிக்கும் திறனில்லாதவராய்...’என்னங்க அந்த இவரு...நரேந்திர மோடி’ என்று இழுத்து திணறி பேசியதை கண்டு கடுப்பான தமிழக பா.ஜ.க. தலைவர்கள் எடப்பாடி தரப்பின் சில முக்கிய நபர்களை தொடர்பு கொண்டு அதிர்ச்சியை பகிர்ந்தார்களாம்.
இதேபோல் தன் பேச்சு நெடுகவே திக்கலும், திணறலுமாய் பல பேரின் பெயரை உச்சரிக்க சீனிவாசன் தடுமாறுவதும், சசிகலாவை பழைய பாசத்தின் உந்துததலால் ‘சின்னம்மா’ என்று சொல்லிவிட்டு பின் திருத்திக் கொள்வதும்...என்று அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தந்திருக்கிறார். 

இதுமட்டுமில்லாமல் சீனிவாசனின் இந்த பேச்சின் சாயலைப் பார்க்கும்போது துணை முதல்வர் பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு கலரிங் பூசுவது போலவும், எடப்பாடியை இரண்டாம் நிலைக்கு தள்ளுவது போலவும் உள்ளதாகவே பழனிசாமியின் தரப்பு கருதுகிறதாம். சிலர் சீனிவாசனுக்கு போன் போட்டு கடுப்பைக் கொட்டி தீர்த்துவிட்டார்களாம். 
ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை செய்ய கமிஷன் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் வனத்துறை அமைச்சரின் இந்த வாய்ப்பேச்சு அரசுக்கு சாதகமாய் அமையுமா அல்லது ஏதாவது ஏழரையை இழுக்குமா? என்பது போகப்போகத்தான் தெரியும்!

 

click me!