
சசிகலா குடும்ப சொத்துக்களை வளைத்து வளைத்து நடந்து கொண்டிருக்கும் ரெய்டால் அணி பேதமில்லாமல் டோட்டல் அ.தி.மு.க.வும் மெர்சலாகி கிடக்கும் நிலையில் வழக்கம்போல் இன்றும் தத்துப்பித்தாக பேசி, காமெடி செய்திருக்கிறார் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.
திண்டுக்கல்லில் நடக்க இருக்கும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவின் கால்கோள் நிகழ்ச்சி இன்று அங்கே நடந்தது. இன்று மாலை தேனியில் நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கு செல்லும் வழியில் இந்த நிகழ்வில் முக்கிய அமைச்சர்களான செங்கோட்டையன், தங்கமணி, செல்லூர் ராஜூ, காமராஜ், உதயகுமார் ஆகியோர் கலந்து கொள்ள திண்டுக்கல் சீனிவாசனுக்கு ஏக சந்தோஷம்.
கலகலப்புடன் நகர்ந்தவர் மூக்கின் முன்னாள் மீடியாக்காரர்கள் மைக்கை நீட்டை “ஆரம்பித்ததுமே ‘பாரதப்பிரதமர்’...என்று வழக்கம்போல் குளறலாக துவங்கியவர் பின் தன்னைத்தானே சரி செய்து கொண்டு ‘பாரத ரத்னா மாண்புமிகு இதயதெய்வம் டாகர் புரட்சித்தலைவர் அவர்களின் நூற்றாண்டு விழாவை.’ என்று திருத்திக் கொண்டார்.
திண்டுக்கல்லார் இப்படி தத்துப்பித்தானதை கண்டு சுற்றி நின்ற அமைச்சர்கள் சிலர் சிரித்துவிட்டனர். அதில் செல்லூர் ராஜூதான் ஏகத்துக்கும் சிரித்து வைத்தார் .(நம்மை விட மிகப்பெரிய மங்குனி அமைச்சர் ஒருவர் இருக்கிறார் எனும் நிம்மதியில் வந்த சிரிப்புதான்! என்று இணையத்தில் இதற்கு பொழிப்புரை கொடுக்கின்றனர் குறும்புக்காரர்கள்.)
தொடர்ந்து திண்டுக்கல் சீனிவாசன் பேச..மேலும் எதையவது அச்சுப்பிச்சுத்தனமாக அவர் சொல்லி வைத்து பெரும் காமெடியாகிவிட கூடாது என்று பயந்த மற்ற அமைசர்கள் முக்கியமான இடங்களில் அவர்களே கைகொடுத்து, தகவலை எடுத்துக் கொடுத்து உதவினர்.
இருந்தாலும் தன் அக்மார்க் குணத்தை விட்டு வைப்பாரா திண்டுக்கல்லார்...
பேசி முடித்து இறுதியில் ‘எல்லாரும் விழாவுல கலந்துக்குங்க. மேற்படி இருக்குறதை சாப்பிட்டுட்டு போயிடலாம்.” என்றார்.
அந்த நேரத்தில் ஜெயா டி.வி. மற்றும் தினகரன் சொத்துக்களில் நடக்கும் ரெய்டை பற்றி செய்தியாளர்கள் கேட்டதும் ‘தெரியலப்பா! இப்பதான் தூங்கி எந்திரிச்சு வர்றேன்’ என்று அவர் எஸ்கேப் ஆக, விலா நோக சிரித்தபடியே மற்ற அமைச்சர்களும் கார் ஏறினார்கள்.