
தமிழகத்தில் பரவலாக, சசிகலாவுக்குச் சொந்தமான இடங்களில், சசிகலாவின் உறவினர்கள் வீடுகளில் அலுவலகங்களில் வருமான வரி சோதனை நடை பெற்று வருகிறது. குறிப்பாக, ஜெயா டிவி, ஜெயா டிவி சி இ ஓ விவேக் வீடு ஆகிய இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
தமிழகம், கர்நாடகம், தில்லி, தெலங்கானா மாநிலம் என பல இடங்களில், சுமார் 180க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று ஒரு நாளில் வருமான வரி சோதனை நடைபெறுகிறது. இந்த சோதனை எல்லாம், அண்மையில் கண்டறியப் பட்ட போலி நிறுவனங்கள் எவர் பெயரில் எல்லாம் பதிவு செய்யப் பட்டிருந்ததோ அவர்கள் தொடர்புடைய இடங்களில் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், போலி நிறுவனங்கள் கணக்குகளை ஜெயா டிவி மூலம் முறைகேடாக பயன்படுத்தியிருக்கக் கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், ஜெயா டிவி, மற்றும் ஜெயா டிவி சி இ ஓ விவேக் ஜெயராமன் வீட்டிலும் சோதனை நடத்தப் பட்டுள்ளது.
சென்னை கோடம்பாக்கத்தை அடுத்த மகாலிங்கபுரத்தில் வசிக்கிறார் விவேக். இவர் இங்கே வந்து சுமார் 8 மாதங்கள் ஆகிறதாம். இந்நிலையில் இன்று காலை 2 கார்களில் 8 அதிகாரிகள், மண விழாவுக்குச் செல்வது போல் வெட்டிங் ஸ்டிக்கர் ஒட்டிய கார்களில் வந்துள்ளனர்.
அப்போது சென்னை மகாலிங்கபுரம் வீட்டில் விவேக் இல்லை. அவர், நேற்று பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவைப் பார்க்க, தினகரனுடன் பெங்களூர் சென்றிருந்தார். இந்நிலையில் இருவரும் சென்னை திரும்பிவிட்டனர். பின்னர் தினகரன் இன்று காலைசெய்தியாளர்களைச் சந்தித்தார். ஆனால், விவேக் உடனே வீடு திரும்பாமல், சென்னையில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கியிருக்கிறாராம். அவர் இன்று மாலை வீடுதிரும்பி, பின்னர் செய்தியாளர்களைச் சந்திப்பார் என்று கூறப்படுகிறது.
இன்று காலை விவேக் வீட்டுக்கு வந்த அதிகாரிகள், விவேக்கின் மனைவியிடம் வங்கி பண பரிவர்த்தனைகள் மற்றும் சில விவரங்கள் குறித்து விசாரித்துள்ளனர். சில கோப்புகளை ஆய்வு செய்துள்ளனர். அப்போது, விவேக் வீட்டின் மொட்டை மாடியில் உள்ள தண்ணீர்த் தொட்டி வரை சென்று சோதனை செய்து வந்தார்களாம்.
இதைக் கேட்டதும், சினிமால பாத்த மாதிரியே இருக்கு இந்த காட்சி என்றும்,
குறிப்பா ‘தெய்வ மகள்’ சீரியல்ல வந்த ஸீன் மாதிரியே இருக்கு என்றும் கலாய்க்கத் தொடங்கி விட்டனர் சமூக வலைத்தளங்களில்! அதிகாரிகளுக்கு நம்ம சீரியல் டைரக்டர்கள்தான் ஐடியாக்கள்லாம் கொடுக்கிறங்களோ என்ற ரீதியில் கருத்துகள் போடப்பட்டு வருகின்றன.