
அதிமுக பொது செயலாளர் சசிகலா, சொத்து குவிப்பு வழக்கில், பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை சந்திக்க தமிழக அமைச்சர்கள் நேற்று சென்றனர்.
பின்னர், அனைவரும் விமானம் மூலம் நேற்று இரவு சென்னை திரும்பினர். சென்னை விமான நிலையத்தில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
ஜெயலலிதாவின் மரணத்துக்கு நீதி விசாரணை வேண்டி ஓ.பன்னீர்செல்வம் உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்துள்ளார். அது அவரது சொந்த விருப்பம்.உண்ணாவிரதம் இருக்கட்டும் அதில் தவறில்லை. உண்ணாவிரதம் இருப்பதால் என்ன பாதிப்பு ஏற்படும். அவர் எங்களுடன் தான் இருந்தார். ஒரு வாரத்தில் மாறிவிட்டால் என்ன செய்ய முடியும்.
சசிகலா பெங்களூர் சிறையில் நன்றாக இருக்கிறார். அவரை, நலம் விசாரிக்க அமைச்சர்கள் நாங்கள் சென்றோம். தேர்தல் ஆணையத்தின் நோட்டீசுக்கு, சசிகலாவின் வக்கீல்கள் பதில் கொடுத்துள்ளனர். 122 எம்எல்ஏக்கள் தேர்ந்தெடுத்த ஒரு முதல்வர் தமிழகத்தை ஆட்சி செய்கிறார். இதில் பினாமி எங்கே இருக்கிறது. பினாமி என்ற பேச்சுக்கே இடமில்லை.
எல்லாரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். கட்சியை பலப்படுத்த வேண்டும். எதிரிகளின் சூழ்ச்சியை முறியடிக்க வேண்டும் என சசிகலா எங்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.