
சத்தசபையில்....அய்யோ மன்னிக்கவும், சட்டசபையில் இரண்டாம் நாள் இன்று!
நாமெல்லாம் பல தடவை பார்த்து, பார்த்து சலித்துப் போன ஸ்டாலின் டீமின் வெளிநடப்பு எந்த தங்குதடையுமில்லாமல் வழக்கம்போல் நடந்து கொண்டிருக்கிறது. அதைப்பற்றி பேசி பிரயோஜனமில்லை. எம்.எல்.ஏ. ஆவதே வெளிநடப்பு செய்யத்தானென்று எதிர்கட்சிகளும், எதிர்கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களை வெளியேற்றுவதே சபையின் மாண்பு என்று ஆளுங்கட்சியும் நினைத்துக் கொண்டிருக்கும் வரையில் தமிழகத்தில் சட்டசபை உருப்படப்போவதில்லை. இதை நாம் சொல்லவில்லை...மிஸ்டர் பொதுஜனம் பொசுங்கிப் போய் சொல்கிறது.
ஆனால் இந்த சட்டமன்ற கூட்டத்தொடர் துவங்கப்போகிறது என்றதுமே நாமெல்லாம் மிக ஆவலோடு ஒரு விஷயத்தை எதிர்பார்த்தோம்! எடப்பாடி அணி தலைமையிலான அ.தி.மு.க.வை அதிரிபுதிரியாக கலக்கப்போகிறது, சட்டமன்றமே கலகலக்க போகிறது, கொஞ்சம் தாண்டினால் இந்த சட்டசபையே கலையப்போகிறது என்கிற அளவில் எதிர்பார்க்கப்பட்ட விஷயமது.
அது...தினகரன் அணியினர் எடப்பாடி கோஷ்டிக்கு எதிராக தாண்டவமாட போகிறார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட விஷயம்தான். தங்கதமிழ்செல்வன், வெற்றிவேல், இன்பதுரை, செந்தில்பாலாஜி, போஸ் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் சபையில் எடப்பாடி டீமுக்கு எதிராக எகிறி பாய்வார்கள், இந்த முறை எதிர்கட்சிகள் ஓய்வெடுக்க, தினகரன் அணி ஒட்டுமொத்த சாம்பியன்ஸிப்பையும் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் முதல்நாளான நேற்று ஸ்டாலின் தலைமையில் எதிர்கட்சிகள்தான் பிரச்னை செய்து சபையை கலக்கியிருக்கிறார்களே தவிர தினகரன் அணி கூட்டுக்குள் ஒளிந்த ஆமையாகிப் போனார்கள்.
தினகரன் அணி இப்படி பேக் அடிக்க காரணம் என்ன? என்று விசாரித்தால்....’எம்.எல்.ஏ.க்கள் பண பேர பிரச்னையை இரண்டு மூன்று நாட்களுக்கு ஸ்டாலின் டீம் எழுப்பிக் கொண்டேதான் இருக்கும். இந்த சூழலில் நாம் செய்யும் அரசியல் பெரிதாக எடுபடாமல் போய்விடும். அதனால் அவர்களை ஆட விடுங்கள். அவர்களின் பிரச்னை தொடர்ந்து நடந்தால் சபாநாயகர் அவர்களை சஸ்பெண்டு செய்யக்கூட வாய்ப்பிருக்கிறது.
அதன் பிறகு நமது மூவ்களை தொடங்கலாம். ஸ்டாலின் அணி செய்யும் கூத்தால் முதல்வருக்கோ, ஆட்சிக்கோ எந்த பாதிப்போ அல்லது பயமோ வராது. ஆனால் நாம் எடுத்து வைக்கும் ஆயுதம் ஆட்சியையே ஆட வைக்கும். எனவே பொறுத்திருந்து பாய்வோம்.” என்று தினகரனே அட்வைஸ் செய்ததால் முதல் நாள் அமைதி காத்துவிட்டார்கள் அவரது அணியினர்.
இரண்டாம் நாளான இன்று ஸ்டாலின் அண்ட்கோ மன்றத்தினுள் சென்று கையெழுத்து போட்டுவிட்டு, பிரச்னை செய்துவிட்டு வழக்கம்போல் வெளியே வந்துவிட்டனர்.
இன்று மெதுவாக தங்களது வேலையை காட்ட துவங்குகிறது தினகரன் அணி. அதாவது இன்று பேரவை முடிந்ததும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 34 பேரும் முதல்வரை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளனராம். அப்போது ‘கட்சி பொறுப்பு தினகரன் அண்ணன் பார்த்துப்பார். துணைப்பொதுச்செயலாளர் அப்படிங்கிற முறையில அவர்தான் கட்சி. நீங்க ஆட்சியை கவனிச்சுக்குங்க. அதுல குறுக்கீடு இருக்காது. ஆனா கட்சியின் லகான் அண்ணன் கையிலதான் இருக்கும்.
பன்னீர் அணியை சம்மதிக்க வெச்சு சேர்த்துக்குறதும், அப்படியே பிரிஞ்சே இருக்க அனுமதிக்குறதும் உங்க விருப்பம். அந்த அணியோட இணைப்புல எங்களோட உதவி தேவைப்பட்டா அண்ணன்கிட்ட சொல்லுங்க, செய்வார்.” என்று ஒரு மெகா டீலை பேச இருக்கிறார்களாம்.
இதற்கு எடப்பாடி அணி ஒத்து வந்தால் சபை நடவடிக்கையில் ஒத்துழைப்பு. இல்லையென்றால் ‘ஸ்டாலின் சஸ்பெண்ட் ஆனது நம்ம கச்சேரியை துவங்கலாம்.’ அப்படின்னு ஏற்கனவே தினகரன் திட்டமிட்டிருக்கும்படி பேரவையே ஸ்தமித்து, ஆட்சியே அதிருமளவுக்கு பஞ்சாயத்துகள் வெடிக்குமாம்.
34 எம்.எல்.ஏ.க்கள் முரண்டு பிடித்தால் நிர்வாக ரீதியில் பலவற்றை நிறைவேற்றுவதில் கடும் முட்டுக்கட்டைகள் வரலாம். ஒருவேளை அதையும் தாண்டி நாம் அமல்படுத்தினால், ‘கோரம் இல்லை’ என்று சொல்லி எதிர்கட்சிகள் நீதிமன்றமே சென்று ஆட்சியை கலைக்கும் முயற்சியில் இறங்குவார்கள் என்று அதிகாரிகள் பூச்சாண்டி காட்டியிருக்கின்றனர்.