
சுயேட்சையாக சட்டசபைக்குள் நுழைய இருக்கும் தினகரன், ஆர்.கே.நகர் தொகுதி மக்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவார் என அவரது ஆதரவாளரான தங்க தமிழ்ச்செல்வன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகரில் குக்கர் சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிட்டு அதிமுக வேட்பாளர் மதுசூதனனை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற தினகரன், சுயேட்சையாக சட்டசபைக்குள் நுழைகிறார்.
தேர்தல் பிரசாரத்தின்போதே, தினகரன் சுயேட்சையாக உங்களுக்கு என்ன செய்துவிட முடியும்? அதே ஆளுங்கட்சியான எங்களுக்கு வாக்களித்தால், உங்கள் தேவைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் பிரசாரம் செய்தனர். ஆனாலும் கூட ஆளுங்கட்சியான அதிமுகவை நிராகரித்த ஆர்.கே.நகர் மக்கள் தினகரனுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தனர்.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய தினகரனின் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன், சட்டசபைக்குள் சுயேட்சையாக செல்லும் தினகரன், ஆர்.கே.நகர் தொகுதி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வார். ஆர்.கே.நகர் தொகுதி மக்கள், குடிநீர், கழிவுநீர் வடிகால், பேருந்து நிலையம், தேசிய வங்கிகள் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் 57000 பேருக்கு வீடு கட்டித்தர வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது. ஆர்.கே.நகர் மக்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற சட்டசபையில் தினகரன் குரல் எழுப்புவார். அந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்குத் தேவையான நிதியை பெற்று கண்டிப்பாக அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வார் என தங்க தமிழ்ச்செல்வன் நம்பிக்கை தெரிவித்தார்.
தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களின் வழக்கை நீதிமன்றம் விரைந்து விசாரித்து உத்தரவிட்டு, எங்கள் தகுதிநீக்கத்தை செல்லாது என்று அறிவித்தால், நாங்களும் தினகரனுடன் சட்டசபைக்கு செல்வோம். அப்போது சட்டசபை களைகட்டும் என தெரிவித்தார்.
வரும் ஜனவரி 8ம் தேதி சட்டசபை கூட உள்ளது குறிப்பிடத்தக்கது.