
தினகரன் தனிக்கட்சி தொடங்குவது குறித்து அவரது தீவிர ஆதரவாளர்கள், மாறுபட்ட கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அதனால் முதல்வர் பழனிசாமி தரப்பு குதூகலமாக இருப்பதாக கூறப்படுகிறது.
ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு, சசிகலாவுக்கு எதிராக பன்னீர்செல்வம் போர்க்கொடி தூக்கியபோது, முதல்வர் பழனிசாமி உள்ளிட்ட தற்போதைய ஆட்சியாளர்கள், சசிகலாவுக்கு ஆதரவாக இருந்தனர். சசிகலா சிறைக்கு சென்றபிறகும் அவரது உத்தரவுப்படி, தினகரனின் தலைமையின் கீழ் செயல்பட்டனர்.
ஆனால், அதன்பிறகு பழனிசாமி தலைமையிலான அணியும் பன்னீர்செல்வம் தலைமையிலான அணியும் இணைந்துகொண்டு சசிகலாவையும் தினகரனையும் ஓரங்கட்டினர். இழந்த இரட்டை இலையை சின்னத்தையும் மீட்டெடுத்து, தினகரனை தனிமைப்படுத்தினர்.
இப்படியாக கடந்த ஓராண்டில் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்த தினகரனுக்கு அவரது ஆதரவாளர்களான தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல், செந்தில் பாலாஜி, பெங்களூரு புகழேந்தி ஆகியோர் உறுதுணையாக இருந்தனர்.
சசிகலா மற்றும் தினகரனுக்கு ஆதரவாகவும் ஆட்சியாளர்களுக்கு எதிராகவும் தினகரன் ஆதரவாளர்கள் பேசிவருகின்றனர். இவ்வாறு தினகரனுக்கு ஆதரவாக மட்டுமே பேசிவந்தவர்கள், தினகரன் தனிக்கட்சி தொடங்குவதாக அறிவித்ததை விரும்பவில்லை.
தினகரன் தனிக்கட்சி தொடங்கினால் அதில் சேரமாட்டோம். நாங்கள் அதிமுகவின் உறுப்பினர்கள். சசிகலாவை பொதுச்செயலாளராக ஏற்றுள்ள நாங்கள், அதிமுகவில் தொடர்ந்து செயல்படுவோம் என தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்திருந்தார்.
ஆனால், செந்தில் பாலாஜியோ தினகரனுக்கு ஆதரவு தெரிவித்தார். தினகரன் கட்சி தொடங்கினால் அவருக்கு தோளோடு தோள் கொடுப்பேன். அவரது தலைமையை ஏற்க தயாராக உள்ளேன் என கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தினகரனின் ஆதரவாளரான வெற்றிவேலோ, தினகரனின் கட்சியில் இணையமாட்டேன். ஆனால் அதேநேரத்தில் அவருக்கு ஆதரவாக வேலை செய்வேன் என தெரிவித்துள்ளார்.
இவ்வாறு தினகரனின் தீவிர ஆதரவாளர்கள், அவர் தனிக்கட்சி தொடங்குவது குறித்து முரண்பட்ட கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவங்களை கண்டு பழனிசாமி-பன்னீர்செல்வம் தரப்பு சற்று ஆறுதல் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. அவர்களுக்குள்ளாகவே முட்டிக்கொண்டு நமக்கு நன்மை நடந்தால் சரிதான் என நினைப்பதாக கூறப்படுகிறது. பழனிசாமி-பன்னீர்செல்வம் அணியில் இருக்கும் அமைச்சர்களும் நிர்வாகிகளும் மாறுபட்ட கருத்தை தெரிவிக்கும்போதும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியபோதும் தினகரன் தரப்பு மகிழ்ந்தது. தற்போது அதேபோல் தான் தினகரன் ஆதரவாளர்கள் மாறுபட்ட கருத்தை தெரிவிக்கும்போது அந்த தரப்பு மகிழ்கிறது.