
இடைத்தேர்தலில் சரித்திர வெற்றியை பெற்றுத் தந்துள்ளீர்கள். உங்களின் தேவைகளை நிச்சயம் நிறைவேற்றித் தருவோம் என்று சட்டமன்ற உறுப்பினர் டிடிவி. தினகரன் தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் இடைதேர்தலில் பெற்ற மெகா வெற்றிக்குப்பின் இன்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து தொகுதியில் மக்கள் மத்தியில் பேசிய ஆர்.கே.நகர் தொகுதி MLA தினகரன்;
சுயேச்சையாக போட்டியிட்டு உங்கள் ஆதரவோடு வெற்றி பெற்றிருக்கிறேன், நிச்சயம் அரசோடு போராடி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் தோளோடு தோள் நின்று நிறைவேற்றுவேன். நமது தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் கழிவுநீர் கலக்காத நல்ல குடிநீர் கிடைக்க நிச்சயம் நடவடிக்கை எடுப்பேன். நீண்ட நாட்களாக பட்டா இல்லாதவர்களுக்கு பட்டா பெற்றுத் தருவேன் என்று உறுதியளித்திருக்கிறேன்.
அம்மா ஜெயலலிதாவின் வழியில் அனைத்தையும் நிச்சயமாக நிறைவேற்றித் தருவேன். இந்த தேர்தலில் நீங்கள் கொடுத்திருக்கும் வெற்றி, தமிழகத்திலேயே பெரிய அரசியல் மாற்றத்தை உருவாக்கித் தந்துள்ளீர்கள். உலக நாடுகளில் வசிக்கும் அனைத்து தமிழர்களும் உற்று நோக்கிய தேர்தல் இது. தேர்தல் வந்தது வேட்பாளராக வந்து வெற்றி பெற்ற பின்னர் தொகுதி பக்கம் வரமாட்டார் என எனக்கு எதிராக பொய்ப்பிரச்சாரம் செய்தார்கள். அதை பொய்யாக்கும் விதமாக பெரியகுளம் மக்களுக்காக பணியாற்றினேனோ அதே போல ஆர்கே நகர் மக்களுக்கும் நன்றியோடு பணியாற்றுவேன்.
அதிமுக, திமுகவை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிடுகிறீர்களே என்றெல்லாம் கேட்டார்கள். அதையெல்லாம் மாற்றி இடைத்தேர்தலில் சரித்திர வெற்றியை தந்துள்ளீர்கள். உங்களின் தேவைகளை நிச்சயம் நிறைவேற்றித் தருவேன். ஏழரை கோடி தமிழ் மக்களின் விருப்பத்தை நிறைவேற்றித் தாருங்கள் என்று கேட்டேன், அதையே எனக்கு தந்துள்ளீர்கள்.
பணம் கொடுத்து வாக்கு வாங்கலாம் என்று பாராமுகமாக இருந்தவர்கள் தோல்வியை ஒற்றுகொள்ளாமல் 20 ரூபாய் டோக்கன், ஹவாலா வெற்றி பெற்றதாக சொல்லி வருகிறார். தேர்தல் வெற்றி எனக்கான வெற்றியல்ல தேர்தலுக்காக உழைத்த நிர்வாகிகள், வாக்காளர்களின் வெற்றி. இது ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் மட்டுமல்ல, அதிமுகவை சின்னத்தை பெறும் தேர்தல் என சொன்னேன் அதை நீங்கள் நிரூபித்துவிட்டீர்கள் என்று தினகரன் பேசினார்.