
ஒரு மாஸ் நபரை வரவேற்று அதிகம் பிரபலமாகாத ஒரு நபர் குரல் கொடுத்தால், ‘இவர் பெற்ற ஆதாயம் என்னவோ?’ என கேட்பது மனித இயல்பு. அந்த வகையில்தன் தமிழருவி மணியனும் விமர்சனங்களால் துளைத்தெடுக்கப்பட்டு வருகிறார்.
சில வருடங்களுக்கு முன் வைகோவை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய தமிழருவி ‘இவரைப்போல் தூய்மையான ஒரு தலைவனை நான் கண்டதில்லை. இவரை முதல்வராக்காமல் ஓயமாட்டேன்.’ என்றார். பின் அப்படியே விஜயகாந்தை வாழ்த்திவிட்டு கடைசியில் வாசனுக்கு சாமரம் போட்டார்.
இது எதுவுமே வேலைக்கு ஆகாத நிலையில் கடந்த சில மாதங்களாக ரஜினிக்கு பல்லக்கு தூக்கிக் கொண்டிருக்கிறார் தமிழருவி. இந்நிலையில் ‘ரஜினியிடமிருந்து தனது சுய தேவைகளுக்கு ஆதாயம் பெறவே அவரை தமிழருவி ஆதரிக்கிறார்!’ என விமர்சனம் எழும்பியுள்ளதை பற்றி தமிழருவி மணியனே பதில் தருகையில்...
“உண்மைதான். ரஜினியிடமிருந்து நான் ஆதாயம் பெற்றிருக்கிறேன் தான். அது என்ன ஆதாயம் தெரியுமா?...ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை ஆற்றுவது, விமர்சனங்களுக்கெல்லாம் பதில் சொல்வது, விவாதங்களில் ஈடுபடுவது! என இதுவரையில் இருந்த நிலையை முற்றிலுமாக மாற்றி பேசுவதைக் குறைத்து, மக்களுக்காக செயல்படுவது ஒன்றே நல் அரசியலாக இருக்கும் என்பதை எனக்கு ரஜினி உணர்த்தினார். அந்த உண்மையை, நல்ல குணத்தை அவரிடமிருந்து நான் ஆதாயமாக பெற்றுளேன். “ என்றிருக்கிறார்.
இதைக் கேட்குறச்சே புல் அரிக்கலை, ஃபுல்லா அரிக்குதுங்கோ! என புலம்பும் எவருக்கும் தமிழருவியிடமிருந்து எந்த பதிலும் கிடைக்காது. காரணம், அவர்தான் இப்போது பேச்சை குறைத்துக் கொண்டுவிட்டாரே!