
கட்சியின் தலைமையாக உள்ள பொதுச்செயலாளர் செயல்பட முடியாத நிலையில் உள்ளதால் நடக்கக்கூடாத செயல்பாடுகள் நடந்து வருவதாகவும், 60 நாட்களில் நான் வரும்போது எல்லாம் சரியாகிவிடும் எனவும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் சசிகலா அணிக்கும் ஒ.பி.எஸ் அனிக்கும் இடையே இருந்த போட்டா போட்டியை முந்தி கொண்டு போகிறது எடப்பாடி அணிக்கும் டிடிவி அணிக்கும் இடையேயான கருத்து வேறுபாடு.
டிடிவி தரப்பு எம்.எல்.ஏக்கள் பல்வேறு எதிர்ப்புகளை தெரிவித்தாலும் எடப்பாடி மவுனம் காத்து வருகிறார்.
அதிமுகவில் இருந்து டிடிவியை விலக்குவதாக எடப்பாடி அணி அறிவித்தது. ஆனால் கட்சியை முன்னேற்ற எடப்பாடி அணிக்கு 60 நாட்கள் காலக்கெடு எனவும், இல்லையென்றால் மீண்டும் கட்சிக்கு தலைமையேற்பேன் எனவும் டிடிவி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், யாருடனும் எனக்கு கருத்து வேறுபாடுகள் இல்லை எனவும், ஒரே விழாவில் நானும் முதல்வரும் கலந்துகொள்வதில் என்ன தவறு? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
கட்சி கட்டுக்கோப்புடன்தான் உள்ளது எனவும், ஒரு சிலர் மீடியாக்களில் அடிக்கடி பேசுவதால் தங்களை ஒரு பெரிய தலைவராக நினைத்து தங்களை முன்னிலைப் படுத்த முயல்வதாகவும், தெரிவித்தார்.
பொதுச்செயலாளர் அறிவிக்க முடியாத சூழலில்தான் எடப்பாடி குடியரசுத் தலைவர் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்தார் எனவும், கட்சியின் தலைமை செயல்பட முடியாத சூழலில் உள்ளதால் சில நடக்கக்கூடாத செயல்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டார்.
60 நாட்களில் தான் வரும்போது எல்லாம் சரியாகி விடும் எனவும், தான் கொடுத்த 60 நாட்கள் முடிந்த பின்னர் உங்களுடைய அனைத்து வினாக்களுக்கும் விடை கிடைக்கும் எனவும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.