
முதல்வர் எடப்பாடிக்கும் – தினகரனுக்கும் இடையே நிலவும் அதிகார போட்டி, அவரது ஆதரவு எம்.எல்.ஏ க்கள் வாயிலாக வெளிப்பட்டு வருகிறது. முதல்வர் மற்றும் அமைச்சர்களால் ஓரம் கட்டப்பட்ட தினகரன், தனது செல்வாக்கை நிலைநாட்டும் வகையில், சில எம்.எல்.ஏ க்கள் மற்றும் எம்.பி க்களை தம் பக்கம் திருப்பி, முதல்வருக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார்.
அதை வெளிப்படுத்தும் விதமாக, சசிகலா மட்டும் கூவத்தூரில் இரண்டு நாட்கள் தாங்கவில்லை என்றால், இந்த ஆட்சியே நிலைத்திருக்காது என்று வெற்றிவேல் உள்ளிட்ட தினகரன் ஆதரவாளர்கள் கூறி வந்தனர். பொது செயலாளர் சசிகலா, துணை பொது செயலாளர் தினகரன், மூன்றாவதுதான் தலைமை நிலைய செயலாளரான முதல்வர் எடப்பாடி என்றும் கூறி வந்தனர்.
எனினும் இதுகுறித்து, எடப்பாடியோ, அவரது ஆதரவாளர்களோ எதையும் கூறவில்லை. ஆனால், சசிகலா ஒப்புதலோடுதான், குடியரசு தலைவர் தேர்தலில், பாஜகவுக்கு அதிமுக ஆதரவு அளித்தது என்று தம்பிதுரை கூறி இருந்ததற்கு, அதிமுக எம்.பி க்கள் அருண்மொழித்தேவன், ஹரி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால், சசிகலாவை மறைக்க சதி நடக்கிறது, அவர் இல்லை என்றால் முதல்வர் ஆகி இருக்க முடியுமா? என்று கூறிய வெற்றிவேல்,எதிராக கருத்து கூறிய எம்.பி க்களையும் கடுமையாக சாடினார்.
இந்நிலையில், தலைமை செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த, காட்டுமன்னார்கோயில் எம்.எல்.ஏ முருகுமாரன் உள்ளிட்ட எடப்பாடி ஆதரவு எம்.எல்.ஏ க்கள் 8 பேர், வெற்றிவேலுக்கு பதிலடி கொடுத்தனர். சசிகலாவை ஒதுக்குவதாக கூறும் வெற்றிவேல், ஆர்.கே.நகர் இடை தேர்தல் பிரச்சாரத்தில் சசிகலாவின் புகைப்படம், பெயர் ஆகியவற்றை இருட்டடிப்பு செய்து ஒதுக்கியது யார்? என்று கேள்வி எழுப்பினர்.
வெற்றிவேல் மாவட்ட செயலாளராக இருந்த, பகுதிக்கு உட்பட்ட ஆர்.கே.நகர் தொகுதியில், சசிகலாவின் படமும், பெயரும் இருட்டடிப்பு செய்யப்பட்டபோது அவர் என்ன செய்து கொண்டிருந்தார்? என்றும் கூறினார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், சசிகலாவின் படமும், பெயரும் எந்த காரணத்துக்காக அகற்றப்பட்டதோ, அதே காரணத்திற்காகத்தான், கட்சி அலுவலகத்தில் இருந்த சசிகலா படங்களும், பேனர்களும் அகற்றப்பட்டன என்றும் கூறினார்.
அப்போது பேசிய குன்னம் தொகுதி எம்.எல்.ஏ ராமச்சந்திரன், அதிமுக வரலாற்றில் இல்லாத வகையில், வாரிசு அரசியலை திணித்தவர் சசிகலா என்று குற்றம் சாட்டினார். மேலும், கட்சியின் சாதாரண உறுப்பினர் ஒருவரை துணை பொது செயலாளராக நியமித்திருந்தால் கூட நாங்கள் ஏற்றுக்கொண்டிருப்போம். ஆனால் அவரது ரத்தமான தினகரனை அல்லவா அவர் நியமித்தார். அதனால்தான் எதிர்க்கிறோம் என்றும் கூறினார்.