
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவின் புகைப்படத்தை பிரச்சாரத்தின் போது பயன்படுத்தாது ஏன் என தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேலிடம் ஈ.பி.எஸ் ஆதரவு எம்.எல்.ஏக்கள் சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு செல்லும் முன் கட்சியை வழிநடத்த தனது அக்காள் மகனான டிடிவி தினகரனை நியமித்து விட்டு சென்றார்.
பின்னர், தலைமை தாங்கிய டிடிவி தினகரன் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தாமே வேட்பாளராக நிற்பதாக அறிவித்தார். பிரசாரத்தில் சசிகலாவின் புகைப்படங்களும் அவர் குறித்த பேச்சுக்களும் இடம் பெறவில்லை.
பணப்பட்டுவாடா விவகாரத்தால் இடைத்தேர்தல் ரத்தானது. இதையடுத்து டிடிவி தினகரன் இரட்டை இலை சின்னத்தை மீட்க லஞ்சம் கொடுக்க முயன்ற புகாரில் சிறைக்கு சென்றார்.
இதனால் கட்சியின் நலனுக்காக தினகரனை கட்சியில் இருந்து நீக்குவதாக எடப்பாடி தரப்பு முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்ட்து.
43 நாட்கள் சிரை வாசத்திற்கு பிறகு வெளியே வந்த தினகரன் கட்சியில் நீட்டிப்பேன் என பேட்டியளித்தார். இதைதொடர்ந்து, அதிமுக அம்மா அணி இரண்டாக பிரிந்தது.
தினகரனையும் சசிகலாவையும் கட்சியில் இருந்து ஒதுக்குவது குறித்து தினகரன் தரப்பு பெரம்பூர் எம்.எல்.ஏ வெற்றிவேல் முதலமைச்சர் எடப்பாடிக்கு எதிராக கடும் விமர்சன்ங்களை முன்வைத்து வந்தார்.
இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று அ.தி.மு.க அம்மா அணியின் எம்.எல்.ஏக்கள் 8 பேர் செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது பேசிய காட்டுமன்னார் கோவில் எம்.எல்.ஏ முருகுமாறன், சசிகலா புகைப்படத்தை கட்சி அலுவலகத்தில் இருந்து அகற்றியது குறித்து வெற்றிவேல் கேள்வி எழுப்பி வருகிறார்.
ஆனால் வெற்றிவேல் மாவட்டச் செயலாளராக இருக்கும் பகுதிக்கு உட்பட்ட ஆர்.கே.நகர் தேர்தலில் சசிகலா புகைப்படத்தை பிரச்சாரத்திற்கு பயன்படுத்தாது ஏன் என்று விளக்கம் அளிக்க முடியுமா என கேள்வி எழுப்பினார்.
மேலும் சுவரொட்டிகளை ஒட்டியது யார்? ஒட்ட சொன்னது யார் என வெற்றிவேல் பதிலளிக்க வேண்டும் என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய குன்னம் எம்.எல்.ஏ ராமச்சந்திரன், என்ன காரணத்திற்காக ஆர்.கே.நகர் தேர்தல்பிரச்சாரத்தில் சசிகலா புகைப்படத்தை தினகரன் தரப்பினர் புறக்கணித்தனரோ அதே காரணத்திற்காகவே தாங்களும் தற்போது சசிகலாவை புறக்கணிக்கிறோம் என விளக்கம் அளித்தார்.
மேலும் சசிகலா அதிமுக தொண்டர்களில் யாரேனும் ஒருவரை நியமித்திருந்தால் கூட நாங்கள் வரவேற்றிருப்போம். ஆனால் அதிமுக அரசியல் வரலாற்றிலேயே இல்லாத வாரிசு அரசியலை அறிமுகப்படுத்தியதால் தான் சசிகலாவை தாங்கள் ஏற்க மறுப்பதாகவும் குன்னம் எம்.எல்.ஏ ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.