
ஆர்.கே.நகரில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இன்றுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைய உள்ள நிலையில், அரசியல் கட்சியினரும் வேட்பாளர்களும் தீவிர பிரசாரம் மேற்கொண்டுவருகின்றனர்.
திமுக, அதிமுக, தினகரன் ஆகிய மூன்று தரப்பும் பரஸ்பரம் குற்றம்சாட்டியும் விமர்சித்தும் வாக்குசேகரித்து வருகின்றனர்.
லயோலா கல்லூரி பேராசிரியர் ராஜநாயகம் மற்றும் பத்திரிகையாளர் அன்பழகன் ஆகியோர் நடத்திய கள ஆய்வின் முடிவுகளின் அடிப்படையில், திமுகவிற்கும் தினகரனுக்கும் இடையில்தான் பிரதான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுபோன்ற கருத்து கணிப்புகளால், அதிமுகவினர் கலக்கத்தில் உள்ளனர். ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா நடைபெறுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. திமுகவும் தினகரனும் இணைந்து ஆளுங்கட்சியான அதிமுகவிற்கு எதிராக பணப்பட்டுவாடா குற்றச்சாட்டுகளை அள்ளி எறிகின்றன. ஓட்டுக்கு 6000 ரூபாயை அதிமுக கொடுப்பதாகவும் அதற்கான வீடியோ ஆதாரங்களுடன் சிறப்பு தேர்தல் அதிகாரியிடம் கொடுத்துள்ளதாகவும் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறிவருகிறார்.
அதேநேரத்தில், திமுகவுடன் இணைந்து அதிமுகவை தோற்கடிக்க தினகரன் முயற்சிப்பதாக ஆட்சியாளர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், ஆர்.கே.நகரில் பிரசாரம் செய்த தினகரன், ஆளுங்கட்சியினர் பணப்பட்டுவாடா செய்துவருகின்றனர். பிரதான எதிர்க்கட்சியான திமுகவினர் கூட பிரசாரத்தில் எங்களை சந்திக்கும்போது, ஆளுங்கட்சியின் பணப்பட்டுவாடாவை தடுத்து நிறுத்த வேண்டும். ஒன்று நீங்கள்(தினகரன்) வெற்றி பெற வேண்டும் அல்லது எங்கள் வேட்பாளர்(திமுக வேட்பாளர்) வெற்றி பெற வேண்டும் என தெரிவிக்கின்றனர் என தினகரன் கூறினார்.
பிரதான எதிர்க்கட்சியே எங்களிடம் இப்படி சொல்கிறார்கள். அந்தளவுக்கு பணம் வாரி இரைக்கப்படுக்கிறது என தினகரன் விமர்சித்தார்.