
இடைத்தேர்தல் என்றாலே தொகுதி மக்களுக்கு ஜாக்பாட் தான். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலும் அதற்கு விதிவிலக்கு அல்ல.
திமுக வேட்பாளர் மருது கணேஷ், எம்.எல்.ஏ க்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களுடன் உற்சாகமாக தொகுதியில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
பன்னீர் தரப்போ, சசிகலா மீது அதிருப்தியில் உள்ள மக்கள் எந்தெந்த பகுதியில் அதிகம் வசிக்கிறார்கள் என்பதை ஆய்வு செய்து ஒரு அறிக்கையே தயார் செய்து வைத்துள்ளது.
அதன் அடிப்படையில், மக்களுக்கு நன்கு பரிச்சயமான உள்ளூர் முகங்களுடன், அதிருப்தியில் இருக்கும் மக்களின் வீடு வீடாக சென்று திண்ணை பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துள்ளனர்.
இந்த திண்ணை பிரச்சாரத்தில் முக்கிய வி.ஐ.பி க்களும் கலந்து கொள்வதால், சசிகலா மீதுள்ள அதிருப்தி இன்னும் அதிகமாகி, தினகரனுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது.
இதை அறிந்து, அதிர்ந்து போன தினகரன், அதை எப்படி முறியடிக்கலாம் என்று மண்டையை போட்டு பிய்த்துக் கொண்டு கடைசியாக ஒரு ஐடியாவை கண்டு பிடித்தார்.
அதன்படி, சசிகலா மீது அதிருப்தி அதிகமாக உள்ள மக்களை தனித் தனியாக சந்தித்து, அவர்களுக்கு தேவையானது என்னென்ன என்று குறிப்பெடுத்துக் கொண்டு, அவற்றை அப்படியே வாங்கி தருவதே திட்டம்.
பன்னீர் தரப்பின் திண்ணை பிரச்சாரத்தை முறியடிக்க, தேவையை பூர்த்தி செய்யும் பிரச்சாரமே சரியான பதிலடி என்று உணர்ந்த தினகரன், அதை நிறைவேற்ற அமைச்சர்கள் சிலருக்கும் உத்தரவிட்டுள்ளார்.
தினகரனின் இந்த பதிலடியை, பன்னீர்செல்வம் தரப்பு எப்படி சமாளிக்க போகிறது? என்பது இனிதான் தெரிய வரும்.