
தேர்தல் ஆணைய அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையிலிருந்து ஜாமினில் வெளிவரும் தினகரனுக்கு திஹார் சிறை அருகே இருந்த சுவரொட்டிகளில் போஸ்டர்கள் ஒட்டி அமர்க்களப்படுத்தியுள்ளனர்.
இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் கமிஷனுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் அ.தி.மு.க. அம்மா அணியின் துணை பொதுச்செயலாளர் தினகரன் மற்றும் அவரது நண்பர் மல்லிகார்ஜூனா ஆகியோர் கடந்த ஏப்ரல் மாதம் டெல்லி குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் அங்குள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தினகரன், மல்லிகார்ஜூனா ஆகியோரின் ஜாமீன் மனுக்களை விசாரித்த தனிக்கோர்ட்டு நீதிபதி பூனம் சவுத்ரி அவர்கள் இருவரையும் நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்ய நேற்று முன்தினம் உத்தரவிட்டார். இவர்கள் இருவரும் கடந்த
மே 1ந்தேதி திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். 34 நாட்களுக்கு பிறகு சிறையில் இருந்து விடுதலையாகி இருக்கிறார்கள்.
இருவரும் 5 லட்சம் ரூபாய் செலுத்தி, சொந்த ஜாமீனில் செல்வதற்கு நீதிபதி பூனம் சவுத்ரி அனுமதி அளித்திருந்தார்.அதுமட்டுமல்ல தினகரன் மற்றும் மல்லிகார்ஜூனா ஆகியோர் ஜாமீனில் வெளியே சென்று சாட்சியங்களை கலைக்கக் கூடாது என்பது போன்ற நிபந்தனைகளை விதித்து ஜாமீன் வழங்கியுள்ளார்.
தினகரனின் பாஸ்போர்ட் ஏற்கனவே அமலாக்கப்பிரிவு வழக்கு தொடர்பாக சென்னை கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டதாக ஆவணம் தாக்கல் செய்யப்பட்டது. அனைத்தையும் சரிபார்த்து ஏற்றுக்கொண்ட நீதிபதி பூனம் சவுத்ரி தினகரன் மற்றும் மல்லிகார்ஜூனாவை ஜாமீனில் விடுவிக்கும் உத்தரவை நேற்று மதியம் பிறப்பித்தார்.
அந்த உத்தரவின் அடிப்படையில் தினகரன் மற்றும் மல்லிகார்ஜூனா ஆகியோர் திகார் ஜெயிலில் இருந்து நேற்று இரவு விடுதலை ஆனார்கள்.
தினகரன் விடுதலையாகும் செய்தியையறித்ததும் அவரது ஆதரவாளர்கள் கையில் பூங்கொத்து மேளதாளங்கள் என திஹார் சிறை வாசலில் மாலை 5 மணி முதல் வழிமேல் விழி வைத்து காத்திருந்தனர். இது போதாதென்று சிறையின் எதிரே இருக்கும் சுவரொட்டிகளில் ஆங்கிலத்தில் "அம்மா வழியில் கட்சியை வழிநடத்த வா தலைவா வா" என்று போஸ்டர்களும் டெல்லியை அதகளம் பண்ணிவிட்டனர்.
பாதுகாப்பு காரணங்கள் என்று கூறி முன்பக்க கேட் வழியாக வராமல், பின்பக்க வாசல் வழியாக வழியாக சுமார் இரவு 9.40 க்கு தினகரன் விடுதலையானார் இது முன்கூட்டியே தெரிந்துகொண்ட தினகரனின் மனைவி அனுராதா பின்பக்க வாசலில் அவருக்காக காத்திருந்தார்.
இதனையடுத்து தினகரனுக்காக கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக தனியார் விடுதி ஒன்றில் தங்கியிருந்த அவரது ஆதரவாளர்கள் சந்தித்தனர். தங்கதமிழ்செல்வன், டி.கே.எம்.சின்னையன் என ஏராளமானோர் இருந்துள்ளனர். தினகரனின் வருகையால் மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்டனர்.