
அதிமுக துணை பொது செயலாளர் டிடிவி.தினகரன், அன்னிய செலாவணி மோசடி வழக்கு தொடர்பாக சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது.
இரு அணிகளும் ஒன்று சேருவது பற்றி என்னிடம் எந்த ஒரு தகவலும், யாரும் கூறவில்லை. நேற்று நான் வெளியூர் சென்றபோது செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் எனக்கு போன் செய்து பேசினார்கள்.
அப்போது, அமைச்சர்கள் கூட்டம் நடத்தி, முக்கிய முடிவு எடுத்து இருக்கிறோம் என கூறினார்கள். ஆனால், எந்த முடிவு, எதற்கான கூட்டம் என அவர்கள் கூறவில்லை. நான் இரவு வீடு திரும்பிய பிறகே, இதுபற்றி எனக்கு தெரிந்தது.
இன்று மதியம் தலைமை அலுவலகத்தில் கூட்டம் நடத்தப்போவதாக அறிவித்தேன். இந்த கூட்டம் என்னுடைய பலத்தை காட்டுவதற்காக இல்லை. ஆனால், இங்கு கூட்டம் நடத்த கூடாது என அவர்கள் முடிவு செய்துள்ளனர். அதை தடுத்து நிறுத்தவும் முடிவு எடுத்துவிட்டனர்.
கட்சி பிளவுபடக்கூடாது என்பதே என் எண்ணம். இவர்கள் ஒதுங்கி கொள்ள சொன்னால், நான் ஒதுங்கி போகிறேன். தகராறு செய்யும் எண்ணம் எல்லாம் கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.