
ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் சசிகலா மற்றும் டிடிவி.தினகரனுக்கு ஓ.பி.எஸ். தரப்பில் எதிர்ப்பு எழுந்து வந்தது. இதை தொடர்ந்து தற்போது கட்சியிலும் ஆட்சியிலும் அவருக்கு அனைத்து அமைச்சர்கள், எம்எல்ஏக்களின் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.
இதனால், அவரது வீட்டில் ஆதரவாளர்களான மூத்த நிர்வாகிகள், பேச்சாளர்களை அழைத்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
இதையொட்டி இன்று காலை பேச்சாளர் நாஞ்சில் சம்பத், டிடிவி.தினகரன் வீட்டில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது.
ஓ.பி.எஸ். நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ள முடியாது. தினகரன் தலைமையில் தான் அதிமுக செயல்படும். இதில் எந்த மாற்றமும் இல்லை. அமைச்சர்கள் யார் முடிவு எடுத்தாலும், கட்சியின் தலைமையும், துணை பொது செயலாளரும் டிடிவி.தினகரன் மட்டுமே. அவர் எடுப்பதே முடிவு.
அதிமுகவில் பிளவு ஏற்படுவதற்கு காரணமே பாஜகதான். இரட்டை இலை சின்னம் முடக்கப்படுவதற்கு முன்னதாகவே, அந்த சின்னம் கிடைக்காது. கட்சியும் இருக்காது அதிமுக அழிந்துவிட்டது என பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
அதேபோல் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன், எனக்கு தெரிந்த நண்பர் ஒருவரிடம், அதிமுக ஆட்சியை கவிழ்த்துவிடுவோம் என கூறியுள்ளார். அதற்கு அறுதி பெரும்பான்மை உள்ள கட்சியை எப்படி கவிழ்க்க முடியும் என எனது நண்பர் வாதிட்டார். அதெல்லாம் ஒன்றும் கிடையாது. விரைவில் பாருங்கள் என தமிழிசை பதில் கூறி பந்தயமும் கட்டியுள்ளார்.
மத்திய அரசு மற்றும் பாஜகாவுக்கு நாடு முழுவதும் அவர்களது கொடி பறக்க விட வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. ஆனால், அது தமிழ்நாட்டில் நடக்காது.
தமிழகம் ஒரு தீவு போல நடத்தப்படுகிறது. இங்கு வகுப்பு வாதம், கலாச்சார யுத்தம் நடக்க விடமாட்டோம். அதிமுகவை அழிக்க பாஜக பல சதி வேலைகளை செய்து வருகிறது. தேர்தல் ஆணையத்தையும் பயன்படுத்துகிறார்கள். பாஜகவினர் மோசமான காரியங்களை செய்து வருகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.