
’போருக்கு தயாராகுங்கள்’ என்று ஆளும் அ.தி.மு.க.வின் எதிர்கட்சியான தி.மு.க.வின் செயல் தலைவர் ஸ்டாலின் போர் சங்கு ஊதி அழைப்பு விடுத்திருக்கும் நிலையில், உட்கட்சி பங்காளியான தினகரன் ‘ஆட்சியை முடித்துவிட போகிறோம்’ என்று இன்று போர் முரசு கொட்டியேவிட்டார்.
தடை தாண்டி தகதகவென பொதுக்குழு நிகழ்ந்ததில் தமிழக முதல்வர்களும், அ.தி.மு.க.வின் தலைவர்களுமான எடப்பாடி பழனிசாமியும், பன்னீர்செல்வமும் மிகப்பெரிய நம்பிக்கையுடன் செயல்பட துவங்கியிருக்கின்றனர். ’பொதுக்குழு தீர்மானங்கள் நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டவையே!’ என்று தினகரன் கோஷ்டி எவ்வளவோ உதார் விட்டுப் பார்த்தும் உருப்படியாக ஒன்றும் வேகவில்லை. பன்னீர் மற்றும் பழனி அணிகள் அடுத்தடுத்த மூவ்களை அதிவேகமாக நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில், தொடர் சறுக்கல்களால் துவண்டு போயிருந்த தினகரன் ஆளும் அணியின் மீது மோதி மோதியே தன் கொம்பை கூர்மை செய்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் இன்று ஏக அழுத்தமாகவே மோதியிருக்கிறார்.
’’தமிழகத்தில் அடுத்த வாரத்திற்குள் ஆட்சி அகன்றுவிடும். ஆளுநருக்காக 3 வாரங்கள் காத்திருந்தோம். ஆனால் எதுவும் நியாயமாக நடக்கவில்லை. வேறு வழியில்லாமல் நீதிமன்றமும் சென்றோம்.
துரோகத்திற்கான முடிவு விழாவை அடுத்த வாரம் சட்டமன்றத்தில் செய்திட தயாராகிவிட்டோம்.” என்று இன்று அழுத்தமாக ஆதங்கப்பட்டிருக்கிறார்.
தினகரனின் இந்த ஆவேசத்தில் தொடர் தோல்விகளின் விரக்தி அப்பட்டமாக தெரிவதை அமைச்சர் பெருமக்கள் ரசிக்கிறார்கள். அதேநேரத்தில் தினகரனின் ஆதரவுப் படையினர் ‘இன்னும் ஒரு வாரத்துல பங்களாவையெல்லாம் காலி பண்ணிட்டு சொந்த ஊருக்கு போய் சேர வேண்டிதான்ணே. ரொம்ப ஆடாதீக!’ என்று தெற்கு அமைச்சர் ஒருவரின் பி.ஏ.வுக்கே போன் போட்டு கலாய்த்தாராம்.
அதற்கு அவரோ “புலி வருது! புலி வருது!ன்னு உங்க தலைவர் சீன் போட்டுட்டே இருக்கார். ஆனா புழு பூச்சி கூட வரமாட்டேங்குதேய்யா! என்ன பண்ண, நீங்களும் அரசியல் நடத்தணுமே, வேறென்ன பண்ணுவீங்க?!” என்று ரொம்ப அலட்சியமாக கிண்டலடித்திருக்கிறார்.