
இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் போதுமான ஆதாரங்கள் இல்லாததால் டிடிவி தினகரனின் பெயர் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடவில்லை என்று இன்று காலை வெளியான தகவலுக்கு டெல்லி குற்றப்பிரிவு ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் அதிமுக இரு அணிகளாக செயல்பட்டு வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் இரு அணிகளும் போட்டியிட்டன.
ஆனால், அக்கட்சியின் அதிகாரப்பூர்வமான இரட்டை இலை சின்னத்தை இரு அணியும் கோரியது. இதனால், தேர்தல் ஆணையம், இரட்டை இலை சின்னத்தை முடக்கியது.
இதற்கிடையில் இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டிடிவி.தினகரனை, டெல்லி மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
மேலும், இந்த விவகாரத்தில் இடைத்தரகராக இருந்த சுகேஷ் சந்திரா என்பரையும் போலீசார் கைது செய்தனர். இதையடுத்து ஒரு மாதத்துக்கு முன், டிடிவி.தினகரன் ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்த நிலையில்,தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கின் குற்றப்பத்திரிகை இன்று டெல்லி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், டிடிவி.தினகரன் பெயர் குறிப்பிடவில்லை.
டிடிவி.தினகரன் மீது புகார் கூறப்பட்டதை அடுத்து அவரிடம் பல்வேறு கட்டங்களில் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால், அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டதாற்கான எவ்வித ஆதாரமும் சிக்கவில்லை என போலீசார் தெரிவித்தனர்.
இன்று காலையில், டிடிவி.தினகரனை டெல்லி, சென்னை, கேரளா, பெங்களூர் ஆகிய பகுதிகளுக்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினோம். இடைத்தரகர் சுகேஷ் சந்திராவுடன், டிடிவி.தினகரன் தொலைபேசியில் பேசிய உரையாடல், வாட்ஸ்அப்பில் தகவல்களை பறிமாறி கொண்டது உள்பட அனைத்து ஆதாரங்களையும் சேகரித்துவிட்டோம்.
இந்த வழக்கின் அனைத்து தகவல்கள் அடங்கிய குற்றப்பத்திரிகை இந்த மாத இறுதியில், நீதிமன்றத்தில் சமர்ப்பித்துவிடுவோம். போதுமான ஆதாரங்கள் இல்லாததால், டிடிவி.தினகரனின் பெயரை, குற்றப்பத்திரிகையில் குறிப்பிடவில்லை என்று தகவல் வெளியானது.
இதற்கு மறுப்பு தெரிவித்து, டெல்லி குற்றப்பிரிவு ஆணையர் சஞ்சய் சராவத், செய்தியாளர்களிடம் பேட்டி அளித்துள்ளார். இரட்டை இலை சின்னம் வழக்கில் டிடிவி தினகரன் பெயர் நீக்கப்படுவதாக வெளியான தகவல் உண்மையில்லை என்று கூறியுள்ளார்.
தினகரனுக்கு எதிராக குற்றப்பத்திரிகை மிக விரைவில் தாக்கல் செய்யப்படும் என்றும், தினகரனுக்கு எதிரான ஆதாரங்கள் திரட்டும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் குற்றப்பிரிவு ஆணையர் சஞ்சய் சராவத் தெரிவித்துள்ளார்.