
ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர், வழக்குகளை வைத்தே சசிகலா குடும்பத்தை அலைக்கழித்த டெல்லி, அதிமுகவை மூன்று அணிகளாக பிரித்து, அதில் இரு அணிகளை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விட்டது. சசிகலாவின் சீராய்வு மனு என்ற ஒன்றை காரணம் காட்டி, குடியரசு தலைவர் தேர்தலில் அதிமுகவின் ஆதரவையும் பெற்று விட்டது.
ஆனால், சசிகலாவின் சீராய்வு மனு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு வாய்ப்பில்லை என்று டெல்லிக்கு நெருக்கமான வட்டாரங்கள் மூலம் சசிகலா தரப்பினருக்கு தெரிய வந்துள்ளது. மேலும், உங்களால் முடிந்ததை பார்த்துக் கொள்ளுங்கள் என்கிற பாணியில், டெல்லியில் இருந்து பதில் வந்ததாகவும், அதனால் சசிகலா தரப்பினர் கடும் அதிர்ச்சி அடைந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், பாஜகவின் செல்வாக்கை நிலைநாட்டி கொள்ள அதிமுக ஆட்சி துணைபோக வேண்டிய அவசியம் இல்லை என்ற முடிவெடுத்துள்ள சசிகலா உறவுகள், பாஜகவுக்கு எப்படி பதிலடி கொடுப்பது? என்று யோசித்துள்ளது. அதன்படி, தமது தீவிர ஆதரவாளர்களாக இருக்கும் 30 க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ க்களின் ஆதரவை விலக்கி, எடப்பாடி ஆட்சியை கவிழ்ப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அடுத்ததாக, ஆளுநர் ஆட்சி வராத வகையில், திமுகவிற்கு ஆதரவு தெரிவித்து, ஸ்டாலின் தலைமையில் புதிய ஆட்சி கொண்டு வரவும் முடிவு செய்வது குறித்து மன்னார்குடி உறவுகள் கடந்த ஒரு வாரமாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாகவே, கருணாஸ், தனியரசு உள்ளிட்ட 3 எம்.எல்.ஏ க்கள் ஸ்டாலினை சந்தித்து பேசியுள்ளனர். மேலும் சில எம்.எல்.ஏ க்களும் தொடர்ந்து திமுக தலைமையுடன் பேசி வருகின்றனர்.
ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைவதில் தங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை. நம்மை படாத பாடு படுத்தி வைத்த பாஜகவின் எண்ணம் நிறைவேற கூடாது என்பதே தங்கள் லட்சியம் என்று மன்னார்குடி உறவுகள் அனைத்தும் ஒட்டுமொத்தமாக இந்த முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
இதனால், தினகரனும், ஸ்டாலினும் திரை மறைவில் அனைத்தையும் ஏற்கனவே பேசி முடித்து விட்டனர் என்றும், ஜூலை மாதத்திலேயே, அதாவது, குடியரசு தலைவர் தேர்தலுக்கு முன்பே இந்த மாற்றம் நிகழ வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்றே கூறப்படுகிறது. அரசியலில் எது வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் நிகழலாம். அதனால், பொறுத்திருந்து பார்க்கலாம் என்கின்றனர் அரசியல் ஆர்வலர்கள்.