
‘திமுக தலைவர் கருணாநிதியை விட அதிக குறுக்கு வழிகள் தெரிந்தவர் தினகரன்’ என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் ஓட்டுக்கு 10,000 தருவதாக கூறி 20 ரூபாய் நோட்டில் எந்த பாகம், எத்தனை ஓட்டு உள்ளது என எழுதி வீடுவீடாக சென்று ஹவாலா ஸ்டைலில் கொடுத்து தினகரன் வெற்றிபெற்றார் என்று அதிமுக தலைவர்கள் பகிரங்கமாக குற்றம்சாட்டி வந்தனர்.
அதுமட்டுமல்ல, திருமங்கலத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து திருமங்கலம் பார்முலாவை திமுக உருவாக்கியது போல, ஆர்.கே நகரில் நூதன முறையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து தினகரன் பார்முலா உருவாக்கி குறுக்கு வழியில் வென்றதாக கூறியுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அதிமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க தினம் அனுசரிக்கப்பட்டது. நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “புயல் வேகத்தில் மக்களுக்கு நிவாரணம் வழங்கிய அரசு, அதிமுக அரசு. இன்றைக்கு எதற்கெடுத்தாலும் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் போராட்டம் நடத்துகிறார். ஆனால், நாங்கள் அதைத் தொடர்ந்து முறியடித்து வருகிறோம்” என்று பேசினார்.
தொடர்ந்து, “கோடிகளில் புரண்டவர்கள் கஜானாவை பற்றி பேசக் கூடாது. திமுக தலைவர் கருணாநிதியை விட அதிக குறுக்கு வழிகள் தெரிந்தவர் தினகரன். இன்றைக்கு அவர் கொல்லைப்புறமாக வந்து கட்சியைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்று பகல் கனவு காணுகிறார்.
ஆனால், ஆயிரம் தினகரன் வந்தாலும் அதிமுக ஆட்சியைக் கவிழ்க்க முடியாது” என்றார். மேலும், “யார் வேண்டுமானலும் கட்சி தொடங்கலாம், ஆனால், இன்னல் வரும்போது மக்களோடு இருந்தால்தான் நிலைக்க முடியும்” என்றார்.