
சசிகலா தொடர்புடைய நிறுவனங்களில் கடந்த நான்கு நாட்களாக வருமான வரித்துறை சோதனைகளை மேற்கொண்டது. அதன் ஒரு பகுதியாக, சசிகலா மற்றும் தினகரனின் ஆஸ்தான ஜோதிடர் வீட்டிலும் ரெய்டு நடந்தது.
கடலூர் மாவட்டம், திருப்பாதிரிப்புலியூர் சரஸ்வதி நகர், இரண்டாவது தெருவில் வசித்து வருகிறார் பிரபல ஜோதிடரான சந்திரசேகர். சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆஸ்தான ஜோதிடராக அவர் இருந்து வருகிறார். பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது சசிகலா தரப்பினருக்கு அவர் உதவியதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஜோதிடர் சந்திரசேகர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். வெள்ளிக்கிழமை மாலை தொடங்கிய சோதனை இரவு முழுவதும் நீடித்து, சனிக்கிழமை காலையும் தொடர்ந்து நடைபெற்ற இந்த சோதனையின் போது, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சொத்துக்களுக்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. ஒரு ஜோதிடராக இருந்து கொண்டு கோடிக்கணக்கில் வீடு கட்டியதும் முறையான கணக்குகள் இல்லாததும் தெரியவந்தது.
இதை அடுத்து, வரும் நவ.20ஆம் தேதி, புதுச்சேரியில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகச் சொல்லி, வருமான வரித் துறை ஜோதிடர் சந்திரசேகருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
சனிக்கிழமை அவரது வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக விளக்கம் அளிக்கும் படி இந்த சம்மன் அவருக்கு அனுப்பப் பட்டுள்ளது.