
ஜெயலலிதாவை வைத்து அரசியல் செய்யும் தினகரன் மற்றும் திவாகரனை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுவதற்கு ஒரு நாளைக்கு முன்பு டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர் வெற்றிவேல் ஜெயலலிதமா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும்போது எடுத்த வீடியோ காட்சியை வெளியிட்டார்.
இதையடுத்து ஆர்.கே.நகரில் டிடிவி தினகரனே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ஆளுங்கட்சியையே தோற்கடித்து வெற்றி பெற்றார்.
முன்னதாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதியே மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார் என அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.
ஆனால் நேற்று மன்னார்குடியில் பேசிய சசிகலாவின் தம்பி திவாகரன், ஜெயலலிதா டிசம்பர் 5 ஆம் தேதி இறக்கவில்லை என்றும் 4 ஆம் தேதி மாலை 5.15 மணிக்கே இறந்து விட்டார் என்று பேசி அதிர்ச்சி அடையச் செய்தார். மேலும் மருத்துவமனையின் பாதுகாப்பை உறுதி செய்த பின்னரே அறிவிப்பு வெளியிடப்படும் என மருத்துவமனை நிர்வாகம் கூறியதாகவும் தெரிவித்தார்.
திவாகரனின் இத்தகைய பேச்சுக்கு அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் மறுப்பு தெரிவித்தது.
இது குறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயகுமார் , ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டிக்கும் நிலையில் டி.டி.வி.தினகரனும், திவாகரனும் தங்களது இஷ்டப்படி செயல்பட்டு வருகிறார்கள் என குற்றம்சாட்டினார்.
மேலும் ஜெயலலிதாவின் மரணத்தை வைத்து தினகரனும், திவாகரனும் அரசியல் செய்கிறார்கள் என்றும் அவர்களை கைது செய்து, விசாரணை கமிஷன் விசாரித்தால் உண்மைகள் வெளிவரலாம் என்றும் ஜெயகுமார் தெரிவித்தார்.