ஜெ., சிகிச்சை வீடியோவை தினகரன் தான் வெற்றிவேலிடம் வெளியிட சொன்னார்!! உண்மையை உடைத்த தினகரன் ஆதரவாளர்

 
Published : Jan 19, 2018, 01:12 PM ISTUpdated : Sep 19, 2018, 01:50 AM IST
ஜெ., சிகிச்சை வீடியோவை தினகரன் தான் வெற்றிவேலிடம் வெளியிட சொன்னார்!! உண்மையை உடைத்த தினகரன் ஆதரவாளர்

சுருக்கம்

dinakaran advised to reveal jayalaitha treatment video said rajasekaran

ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை வெற்றிவேலிடம் கொடுத்து தினகரன் தான் வெளியிட சொன்னார் என தினகரன் ஆதரவாளரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான ராஜசேகரன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22ம் தேதி ஜெயலலிதா சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 75 நாட்கள் தீவிர சிகிச்சைக்குப் பிறகு கடந்த ஆண்டு டிசம்பர் 5ம் தேதி ஜெயலலிதா மாரடைப்பால் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பின. ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது அவரது புகைப்படங்களை வெளியிட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. ஆனால், ஜெயலலிதா மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டதிலிருந்து அவர் இறந்த பிறகுதான் அவரை பார்க்க முடிந்தது. அதுவரை அவர் சிகிச்சை பெற்ற புகைப்படமோ வீடியோவோ வெளியிடப்படவில்லை.

ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான தனிநபர் விசாரணை ஆணையம் விசாரித்துவருகிறது. ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான எந்தவிதமான ஆதாரங்களாக இருந்தாலும் சமர்ப்பிக்குமாறு விசாரணை ஆணைய தலைவர் ஆறுமுக சாமி அறிவுறுத்தியிருந்தார்.

ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டபோதிலும், அப்போதெல்லாம் கூட அதுதொடர்பான எந்தவிதமான ஆதாரங்களும் வெளியிடப்படவில்லை. ஆனால், ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோ இருப்பதாக திவாகரனின் மகன் மற்றும் தினகரன் ஆகியோர் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு முந்தைய நாள் தினகரனின் ஆதரவாளர் வெற்றிவேல், ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது சசிகலாவால் எடுக்கப்பட்ட வீடியோ என்று ஒரு வீடியோவை வெளியிட்டார். இந்த வீடியோவை வெளியிடுவது சசிகலாவுக்கோ தினகரனுக்கோ தெரியாது எனவும் வீடியோவை வெளியிட்டதற்காக அவர்களிடம் நான் மன்னிப்பு கோரிக்கொள்கிறேன் எனவும் வெற்றிவேல் தெரிவித்தார்.

வெற்றிவேல் வீடியோ வெளியிடும் விஷயம் தனக்கு தெரியாது என தினகரனும் தெரிவித்திருந்தார். ஆனால், தினகரனுக்கு தெரியாமல் அந்த வீடியோ வெளியிடப்பட்டிருக்க வாய்ப்பில்லை என இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஜெயலலிதாவின் சிகிச்சை வீடியோவை தினகரன் சொல்லித்தான் வெற்றிவேல் வெளியிட்டார் என தினகரனின் ஆதரவாளரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான ராஜசேகரன் தெரிவித்துள்ளார். திருச்சியில் நடந்த விழா ஒன்றில் பேசிய ராஜசேகரன், ஜெயலலிதாவின் சிகிச்சை வீடியோவை வெற்றிவேலிடம் கொடுத்து தினகரன் தான் வெளியிட சொன்னார் என தெரிவித்துள்ளார்.

தினகரன் ஆதரவாளரின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதாவின் இறப்பை மையமாக வைத்தே தமிழகத்தில் அரசியல் செய்யப்படுவது அதிமுக தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

தைரியம் இருந்தால் ரூபாய் நோட்டுகளில் காந்தி படத்தை மாற்றுங்க! பாஜகவுக்கு துணை முதல்வர் சவால்!
வேர் இஸ் அவர் லேப்டாப்..? முதல்வர் ஸ்டாலினின் தேர்தல் நாடகம்..! அடித்து ஆடும் இபிஎஸ்!