சொன்னதைக்கூட செய்யவில்லை.. இது கார்ப்பரேட்டுகளுக்கான அரசு.. திமுகவை திருப்பி அடித்த அண்ணாமலை..!

By Asianet TamilFirst Published Dec 2, 2021, 9:38 PM IST
Highlights

விவசாயிகளே இந்த சட்டங்கள் வேண்டும் என்று கேட்கும் காலம் வரும் என்ற நம்பிக்கை எனக்கு நிறைய உள்ளது. அப்போது அதை கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை எடுப்போம்.

விவசாயிகளே வேளாண் சட்டங்கள் வேண்டும் என்று கேட்கும் காலம் வரும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

கோவையில் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “அன்னூர் தாலூக்காவில் 3,800 ஏக்கர் விளைநிலத்தில் தொழிற்பேட்டையை அமைக்க தமிழ்நாடு தொழில்வளர்ச்சி கழகம் வலுக்கட்டாயமாக முயற்சி செய்து வருகிறது. இந்தப் பகுதியில் தண்ணீர் வளம் நன்றாக இருப்பதால், அதை குறி வைத்து தொழிற்பேட்டை அமைக்க முயற்சிக்கிறார்கள். இங்குள்ள விவசாயிகளை விவசாயம் செய்ய அரசு அனுமதிக்க வேண்டும். தமிழகத்தில் வானம்பார்த்த பூமியாக உள்ள இடங்களில் தொழிற்பேட்டையை அமைத்துக்கொள்ளலாம். இங்கு வேண்டாம். அதையும் மீறி தொழிற்பேட்டை அமைக்க முயற்சி செய்தால், போராட்டங்களை நடத்த பாஜக தயங்காது.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பெட்ரோல் விலையை குறைப்பதாக எப்போதும் சொல்லவில்லை. ஆனால், தற்போது பெட்ரோல் விலையை குறைத்துள்ளார். மத்திய அரசு விலையைக் குறைத்த பிறகு, மாநில அரசு விலையை குறைக்காவிட்டால் மக்கள் ஏற்கமாட்டார்கள் என்பது அவருக்குத் தெரியும். ஏற்கெனவே தமிழகத்தில் பெட்ரோல் ரூ.5, டீசல் ரூ.4 குறைப்பதாக தெரிவித்த திமுக அரசு, அந்த விலையைக்கூட குறைக்கவில்லை. ஏனெனில், இது கார்ப்பரேட்டுகளுக்கான அரசு. 

வேளாண் சட்டங்கள் தவறானவையே கிடையாது. ஒரு விவசாயி தான் விளைவித்த பொருளுக்கு உரிய விலை வேண்டும் என்றால் வேளாண் சட்டம் மிகவும் முக்கியம். நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்பட்டுவிட்டன. விவசாயிகளே இந்த சட்டங்கள் வேண்டும் என்று கேட்கும் காலம் வரும் என்ற நம்பிக்கை எனக்கு நிறைய உள்ளது. அப்போது அதை கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை எடுப்போம். 

அதிமுக-பாஜக கூட்டணியில் எந்தப் பிளவும் கிடையாது. எங்களைப் பொருத்தவரை கூட்டணியில் தெளிவாக இருக்கிறோம். சில சில சட்டங்கள் குறித்து கூட்டணிக்குள் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஏனென்றால், அவர்கள் ஒரு கட்சியை நடத்துகிறார்கள். நாங்கள் ஒரு கட்சியை நடத்துகிறோம். இருந்தாலும், முக்கியமான கொள்கை அடிப்படையில் ஒன்றாக இருக்கிறோம்.” என்று அண்ணாமலை தெரிவித்தார். முன்னதாக  தொழிற்பேட்டை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் கிராம மக்கலை சந்தித்து அண்ணாமலை பேசினார். 
இப்பகுதியில் கன்னட மொழி பேசும் மக்கள் அதிகம் வசிப்பதால் அண்ணாமலை கன்னடத்தில் பேசினார்.

click me!