கவனீத்தீர்களா, தர்மயுத்தம் நடத்திய ஓபிஎஸ் பக்கம் நின்ற கே.பி. முனுசாமியை தட்டித்தூக்கிய இபிஎஸ்.. பின்னணி என்ன?

By Asianet TamilFirst Published Jun 21, 2022, 7:16 AM IST
Highlights

அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரம் கொளுந்துவிட்டு எரியும் சூழலில், 2017-இல் தர்மயுத்தம் நடத்திய ஓ. பன்னீர்செல்வம் பக்கம் இருந்த கே.பி. முனுசாமி எடப்பாடி பழனிச்சாமி பக்கம் வந்துவிட்டதன் பின்னணி குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளன. 

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தலை தூக்கியுள்ள நிலையில், அதை அடைவதில் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக உள்ளார். ஓ. பன்னீர்செல்வமோ இரட்டைத் தலைமையே தொடர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். இதனால், ஓபிஎஸ் - ஈபிஎஸ் ஆகியோர் தங்களுடைய ஆதரவாளர்களுடன் தனித்தனியாக ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த 2020-ஆம் ஆண்டில் முதல்வர் வேட்பாளரை அறிவிக்கும் விஷயத்திலும் இதேபோன்ற நிலைமை ஏற்பட்டது. அப்போது ஓபிஎஸ்ஸை அதிமுக மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் சமாதானப்படுத்தியதைப் போல, தற்போதும் சமாதனப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

இந்த விவகாரம் கட்சியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் மூத்த தலைவர்கள் செங்கோட்டையன், தம்பிதுரை, செல்லூர் ராஜூ ஆகியோர் பழனிசாமியையும் ஓ. பன்னீர்செல்வத்தையும் தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தினர். ஆனால், ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. ஒற்றைத் தலைமை தேவையில்லை என்று ஓபிஎஸ் பேட்டி கொடுத்தும் பார்த்துவிட்டார். தன்னைப் பற்றியும் அதிமுகவுக்காக தான் செய்ததைப் பற்றியும் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்தியும் ஓபிஎஸ் பார்துவிட்டார். இதற்கு எதற்கும் இபிஎஸ் அசைந்து கொடுக்காததால், இறுதிக்கட்டமாக பொதுக்குழுவை ஒத்திவைக்கும்படி இபிஎஸ்ஸுக்குக் கடிதமும் எழுதிவிட்டார். இதற்கும் இபிஎஸ்ஸிடமிருந்து பதில் இல்லை.

அதேவேளையில், “அந்தக் கடிதம் துணை ஒருங்கிணைப்பாளரான தனக்கும் வந்து சேரவில்லை. திட்டமிட்டப்படி பொதுக்குழு நடைபெறும்” என்று இபிஎஸ் வாய்ஸில் கே.பி முனுசாமி பேசினார். இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம், 2017-ஆம் ஆண்டில் ஓபிஎஸ் தர்மயுத்தத்தை மெரீனா கடற்கரையில் தொடங்கியபோது, முதல் ஆளாக வந்து ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு தெரிவித்தவர் கே.பி. முனுசாமிதான். அப்போது ஓபிஎஸ்ஸுக்குப் பக்கபலமாகவும் இருந்தார் கே.பி.முனுசாமி. அதே ஆண்டில் ஓபிஎஸ் - இபிஎஸ் அணிகள் இணைப்புக்காக பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியபோது, தன்னுடைய அணியின் பேச்சுவார்த்தைக் குழு தலைவராக கே.பி. முனுசாமியைத்தான் ஓபிஎஸ் நியமித்தார். அந்த கே.பி. முனுசாமிதான் இப்போது இபிஎஸ் பக்கம் நிற்கிறார்.

கே.பி. முனுசாமி மட்டுமல்ல, அன்று ஓபிஎஸ் பக்கம் நின்ற நத்தம் விஸ்வநாதன், செம்மலை போன்றோரும் இபிஎஸ் பக்கம் வந்துவிட்டார்கள். அதற்கு ஒரு காரணத்தை அதிமுகவில் சொல்கிறார்கள். கடந்த 2012-ஆம் ஆண்டில் அதிமுகவிலிருந்து சசிகலா நீக்கப்பட்டபோது அதிமுக பொதுக்குழுவில் பேசிய கே.பி. முனுசாமி, “அம்மா பிடித்து வைத்தால் பிள்ளையார். தூக்கியெறிந்தால் சாணி” என்று சசிகலாவை மறைமுகமாக சாடி பேசினார். சசிகலாவோடு ஒத்துப்போக முடியாமல் இருந்தார் கே.பி.முனுசாமி. ஆனால், சசிகலா மீண்டும் ஜெயலலிதாவுடன் ராசியான பிறகு, அதிமுகவில் நால்வர் அணியில் ஒருவராக கோலோச்சிக்கொண்டிருந்த  கே.பி. முனுசாமி அமைச்சர் பதவி, மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு ஓரங்கட்டப்பட்டார். 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் கே.பி. முனுசாமியை பென்னாகரம் தொகுதிக்கு மாற்றிவிட்டார் ஜெயலலிதா. இதேபோல நத்தம் விஸ்வநாதனை ஆத்தூர் தொகுதிக்கு மாற்றிவிட்டார். இருவருமே தேர்தலில் தோற்றுப்போனார்கள்.

இதற்கெல்லாம் சசிகலா தரப்பு பின்னணியில் இருந்ததாக நினைத்த கே.பி. முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் போன்றோர், சசிகலாவுக்கு எதிராக  ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தியபோது, எதிரிக்கு எதிரி நண்பன் என்ற அடிப்படையில் இயல்பாக அவருக்கு ஆதரவு கொடுத்தனர். ஆனால், இப்போது சசிகலாவை அதிமுகவுக்குக் கொண்டு வருவதில் ஓபிஎஸ் நெகிழ்வுதன்மையுடன் ஓபிஎஸ் கருத்து தெரிவித்தார். ஆனால். சசிகலாவால் முதல்வராக்கப்பட்ட இபிஎஸ் அதை கடுமையாக எதிர்க்கிறார். தனக்கு பிரச்சனை என்றால், சசிகலாவுடன் கைகோர்க்க ஓபிஎஸ் தயங்கமாட்டார் என்று இவர்கள் கருதுவதால்,  ஓபிஎஸ்ஸிடமிருந்து தாவி இப்போது இபிஎஸ் பக்கம் வந்துவிட்டதாக அதிமுக வட்டாரங்களில்  பூடகமாகப் பேசுகிறார்கள். மெய்யாலுமா?
 

click me!