சொன்னீங்களே செஞ்சீங்களா.?? கொஞ்சமாவது மனசாட்சி இருக்கிறதா முதல்வரே..திமுகவை தெறிக்கவிடும் சீமான்

By Ezhilarasan BabuFirst Published Jul 2, 2022, 9:33 AM IST
Highlights

காற்றில் பறக்கவிட்டத் தேர்தல் வாக்குறுதிகள் பல இருக்கையில் அவற்றை நிறைவேற்றிவிட்டதாகப் பெருமைப்பட்டுக்கொள்வதற்கு உளச்சான்று உறுத்தவில்லையா முதல்வரே? என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். 

காற்றில் பறக்கவிட்டத் தேர்தல் வாக்குறுதிகள் பல இருக்கையில் அவற்றை நிறைவேற்றிவிட்டதாகப் பெருமைப்பட்டுக்கொள்வதற்கு உளச்சான்று உறுத்தவில்லையா முதல்வரே? என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:-

சனநாயகத்தால் நிறுவப்படும் ஓர் அரசை நாட்டின் குடிகள்தான், மதிப்பிட வேண்டும். ஆட்சி முறைமைகளில் நன்மைகள் நிகழ்ந்தால் அவர்களாகத்தான் போற்றிக் கொண்டாட வேண்டும். ஆனால் இங்கோ, ‘நூறாண்டு போற்றும் ஓராண்டு சாதனை’ என ஆட்சியாளர்களே அரசுப் பணத்தில் விளம்பரம் செய்துச் சுயதம்பட்டம் அடிக்கும் கேலிக்கூத்துகளும், 'நல்லாட்சியின் நாயகன்' எனத் தங்களுக்குத் தாங்களே பட்டம் சூட்டிக்கொள்ளும் நாடகங்களும் நாள்தோறும் அரங்கேறுகின்றன.

தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளையே நிறைவேற்றிடாத ஆட்சியாளர் பெருந்தகைகள், நாட்டையே மாற்றிப் படைத்து, நல்லாட்சி தந்து கொண்டிருப்பதாகக் கூறுவது வெட்கக்கேடானது!

தான் அளித்த தேர்தல் வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றிவிட்டதாக தற்பெருமையோடு கூறுகிறார் மாண்புமிகு முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர்கள்! எப்போது, எங்கே நிறைவேற்றினீர்கள் முதல்வரே? அவற்றை எல்லாம் மக்கள் அறிவார்களா?

நீட் தேர்வுக்கான விலக்கு மாநில அதிகாரத்திற்கு அப்பாற்பட்டது என அறிந்திருந்தும், புதிய சூத்திரம் வைத்திருக்கிறோம்; ரகசியத்திட்டம் வைத்திருக்கிறோம்; அவற்றால், நீட் தேர்வுக்கான விலக்கைப் பெறுவோம் என மேடைதோறும் முழங்கினீர்கள். உங்கள் ஆட்சியில் இதோ இரண்டாவது நீட் தேர்வும் வந்துவிட்டது. என்ன ஆயிற்று அந்த சூத்திரம், இரகசியமெல்லாம்?

அவையும் மறந்துபோனதா? முதல் சட்டமன்றக் கூட்டத்தொடரில் தீர்மானம் இயற்றி, நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவோம் எனத் தேர்தல் அறிக்கையில் கூறிவிட்டு, தீர்மானம் இயற்றவே மூன்று மாதங்கள் காலங்கடத்தினீர்கள். நீட் தேர்வு அச்சத்தால் அடுத்தடுத்து மாணவப்பிஞ்சுகள் கருகி வரும்போதும் கள்ளமௌனம் சாதிப்பதுதான் நீங்கள் கொடுத்த வாக்கை நிறைவேற்றிய இலட்சணமா? ஏழு தமிழர் விடுதலையைச் சாத்தியப்படுத்துவோம் என்றீர்கள்! 

தம்பி பேரறிவாளன் தானாகச் சட்டப்போராட்டம் நடத்திப் பெற்ற விடுதலைத் தீர்ப்பு, ஆறுபேர் விடுதலைக்கான திறவுகோலாகக் கிடைத்தும், அதனைக்கொண்டு, ஆளுநருக்கு அழுத்தம் தந்து விடுதலையைச் சாத்தியப்படுத்தாமல் நிற்பதேன்? இதுதான் நீங்கள் கொடுத்த வாக்கை நிறைவேற்றிய இலட்சணமா?

சமூக நீதியின் அடிப்படையில், குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் தரப்படும் என்றீர்கள். இப்போது அதற்குத் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும், நிதிநிலை சரியான பிறகு கொடுப்போம் என்றும் சாக்கு போக்குச் சொல்கிறீர்கள். இதுதான் கொடுத்த வாக்கை நீங்கள் நிறைவேற்றிய இலட்சணமா?

பெட்ரோல் லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 4 ரூபாயும் குறைக்கப்படும் என வாக்குறுதி அளித்தீர்கள். ஆனால், பெட்ரோலுக்கு 3 ரூபாய் மட்டும் விலையைக் குறைத்துவிட்டு, அத்தியாவசியப் பொருட்களைச் சுமந்து செல்லும் கனரக வாகனங்களுக்கான டீசல் விலையில் அதுகூடக் குறைக்காமல் விட்டீர்கள். இதுதான் கொடுத்த வாக்கை நீங்கள் நிறைவேற்றிய இலட்சணமா? எரிவாயு உருளைக்கு 100 ரூபாய் மானியமாக வழங்கப்படும் என அறிவித்தீர்கள். இன்றோ அதுகுறித்தான பேச்சே எழவில்லை. இதுதான் நீங்கள் கொடுத்த வாக்கைக் காப்பாற்றிய இலட்சணமா?

சென்னை உள்ளிட்ட மாநகராட்சிகளில், லாரிகள் மூலமாக நீர் வழங்குவதை தவிர்க்க, குழாய் மூலம் குடிநீர் வழங்கப்படும். அனைத்துக் கிராமங்களுக்கும் தூய்மையானக் குடிநீர் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தீர்கள். எப்போது அவற்றை செயல்படுத்தப் போகிறீர்கள்? கண்ணுக்கெட்டிய தூரம்வரை அதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை! இதுதான் நீங்கள் கொடுத்த வாக்கைக் காப்பாற்றிய இலட்சணமா?

தமிழக ஆறுகள் அனைத்தும் மாசடையாமல் காக்க, ‘தமிழ்நாடு ஆறுகள் பாதுகாப்புத் திட்டம்’ உருவாக்கப்படும் என்றீர்கள். கடந்த ஓராண்டு ஆட்சியில் ஆறுகளைக் காக்க நீங்கள் தீட்டிய திட்டங்கள் என்ன? குறைந்தது, மணல் கொள்ளையைத் தடுக்கவாவது முனைந்ததுண்டா? கண்முன்னே நடந்துவரும் கனிமவளக் கொள்ளையைத் தடுக்க முயற்சி எடுத்ததுண்டா? இதுதான் நீங்கள் கொடுத்த வாக்கைக் காப்பாற்றிய இலட்சணமா?

சமூக நீதியென்று பேசிவிட்டு, தமிழின நீதியைப் பேச மறுப்பதுதான் திராவிட மாடல் ஆட்சியா? இதுவெல்லாம்தான் நீங்கள் கொடுத்த வாக்கைக் காப்பாற்றிய இலட்சணமா?

இப்படி உங்களால் நிறைவேற்றப்படாத வெற்று வாக்குறுதிகள் இன்னும் ஏராளம் இருக்கின்றன! மேற்சொன்ன யாவும் தேர்தல் காலத்தில் அள்ளி நீங்கள் அளந்துவிட்டு, இன்றுவரை நிறைவேற்றாமல் விட்டவற்றின் சில துளிகள்தான்!

உண்மை இவ்வாறிருக்க, தேர்தல் வாக்குறுதிகள் முழுவதையும் நிறைவேற்றிவிட்டதாகக்கூறுவது உண்மைக்குப் புறம்பானது இல்லையா? அப்படிக் கூற உங்களின் உளச்சான்று உறுத்தவில்லையா? கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றிவிட்டீர்கள் என அண்ணா மேல் ஆணையாகத்தான் உங்களால் சொல்ல முடியுமா முதல்வர் அவர்களே..?
 

click me!