
அண்மையில் நடந்து முடிந்த மாநிலங்களவை தேர்தலில் அதிமுகவுக்கு இரண்டு பதவிகள் கிடைப்பது உறுதியாகி இருந்தது. இந்தப் பதவியைப் பெற முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.பி.க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், அதிமுக நிர்வாகிகள் பலரும் போட்டியிட்டனர். இந்தப் பதவியைப் பெறும் ரேஸில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆகியோர் முன்னிலையில் இருந்தனர். ஆனால், இந்தப் பதவியை ஓபிஎஸ் - ஈபிஎஸ் ஆதரவாளர்களுக்கு தலா ஓரிடம் என்று பெறும்வண்ணம் ஓபிஎஸ் அழுத்தம் கொடுத்து பெற்றதாகக் கூறப்பட்டது. அந்த ஓரிடம்தான் தென் மாவட்டத்தில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஆர். தர்மருக்கு வழங்கப்பட்டது. இதனால், ஜெயக்குமார் ஓபிஎஸ் மீது அதிருப்தியில் இருந்ததாகவும் கூறப்பட்டது.
வழக்கமாக அதிமுக கட்சி ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு ஒற்றைத் தலைமை குறித்து செய்தியாளர்கள் ஏதாவது கேள்வி எழுப்பினால், “ஒற்றைத் தலைமை என்ற பேச்சுக்கு இடமே இல்லை. கட்சியில் இரட்டைத் தலைமைதான்” என்று அடித்து பேசுபவர் ஜெயக்குமார். ஆனால், மூன்று தினங்களுக்கு முன்பு நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு, “ஒற்றைத் தலைமை குறித்து ஆலோசனை நடைபெற்றதாக” ஜெயக்குமார் அளித்த பேட்டிக்குப் பிறகுதான் அதிமுகவில் மீண்டும் சர்ச்சை தீ பற்றிக்கொண்டது. தற்போது அதிமுக தலைமை அலுவலகத்தைச் சுற்றியும் சென்னையின் பிற இடங்களிலும் ஓபிஎஸ் - ஈபிஎஸ் ஆதரவாளர்கள் மாறி மாறி போஸ்டர் ஒட்டுவதும் கோஷங்கள் எழுப்புவதும் என காட்சி மாறியிருக்கிறது. மேலும் கட்சி நிர்வாகிகளும் ஓபிஎஸ் - இபிஎஸ் என மாறி மாறி பேச்சுவார்த்தை நடத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதையெல்லாம் மனதில் வைத்துதான் ஓபிஎஸ் செய்தியாளர்களைச் சந்தித்தபோது உள்ளம் குமுறி பேட்டி அளித்திருக்கிறார். அதில் பல விஷயங்களைக் குறிப்பிட்டு சொன்ன ஓபிஎஸ், குறிப்பாக, “ஜெயக்குமார் பேசியதால்தான் ஒற்றை தலைமை பிரச்சனை பெரிதானது. இதுவரை நல்லாத்தான் போயிட்டு இருக்கு. எனக்கே தெரியல எதுக்காக இந்த ஒற்றை தலைமை பிரச்சனை வருதுன்னு, கனவா நனவா என்பது போல இருக்கிறது.” என்று ஓபிஎஸ் சொன்னதுதான் இதில் ஹைலைட். இதன்மூலம் எம்.பி. பதவிக் கிடைக்காததால் ஓபிஎஸ்ஸை ஜெயக்குமார் சிக்கலில் மாட்டிவிட்டாரா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.