
அதிமுக தொண்டர்களிடமிருந்து என்னை பிரிக்க முடியாது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். எந்தக் காரணத்தைக் கொண்டும் அதிமுகவை பிளவுபடுத்த கூடாது என்பது என்னுடைய நிலைப்பாடு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதிமுக ஓபிஎஸ்-இபிஎஸ் என்று இரட்டை தலைமையின் கீழ் இயங்கி வரும் நிலையில் ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற குரல் எழுந்து கட்சி மீண்டும் இரண்டாக பிரிந்து நிற்கிறது. ஒற்றைத் தலைமை என்ற குரல் பெரும்பாலும் எடப்பாடி பழனிச்சாமியின் தரப்பிலிருந்தே எழுகிறது. அதேநேரத்தில் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாகவும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அதிமுகவினர் சுவரொட்டி ஒட்டி வருவது எறியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதுபோல் அமைந்துவிட்டது. அதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் 23ஆம் தேதி சென்னை மாநகரத்தில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க 2,900 உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் துரித கதியில் நடந்து வருகிறது. வழக்கத்துக்கு மாறாக இந்த பொதுக்குழுவில் சிறப்பு அழைப்பாளர்களுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. இந்நிலையில் ஓபிஎஸ் இபிஎஸ் ஆதரவு தலைவர்களாக அதிமுகவினர் பிரிந்து நிற்கின்றனர்.
சிவி சண்முகம், ஜெயக்குமார், வளர்மதி போன்றோர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். அதேநேரத்தில் வைத்தியலிங்கம், நத்தம் விஸ்வநாதன், பொன்னையன், திண்டுக்கல் சீனிவாசன், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். அதிமுக கட்சி அலுவலகத்தில் ஷிப்ட் முறையில் மாற்றி மாற்றி இந்த ஆலோசனை நடந்து வருகிறது. அதேபோல் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பெரும்பாலான நிர்வாகிகள் ஓற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி வாக்கெடுப்பின் மூலம் தலைமையை தேர்ந்தெடுக்க விரும்பினால் அதற்கும் தயார் என அவர்கள் கூறியுள்ளதாகவும் தெரிகிறது. ஆனால் ஒற்றை தலைமை என்ற முடிவுக்கு பன்னீர்செல்வம் தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுதான் இந்த களேபரத்திற்கு காரணம்.
இந்நிலையில் அதிமுக தலைமை அலுவலத்தில் தனது ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் இன்று ஆலோசனை மேற்கொண்டார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தனது உள்ளக் குமுறலை அவர் கெட்டித் தீர்த்துள்ளார். அவர் பேசிய விவரம் பின்வருமாறு:- நானும் எடப்பாடிபழனிசாமியும் இதுவரை ஒற்றை தலைமை குறித்து பேசியதில்லை, அதிமுக தொண்டர்களிடமிருந்து என்னை ஒருபோதும் ஓரங்கட்டி விட முடியாது, எந்த நேரத்தில் கட்சி இரண்டாக பிளவுபட்டுவிடக்கூடாது என்பது என் நிலைப்பாடு. பொதுச்செயலாளர் பதவிக்கு வேறு ஒருவரைக் கொண்டு வருவது ஜெயலலிதாவுக்கு செய்கிற துரோகம். இன்றைய சூழ்நிலையில் ஒற்றைத் தலைமை என்பது தேவையில்லை, இரட்டை தலைமை நன்றாக போய்க்கொண்டிருக்கிறது. ஒற்றை தலைமை விவகாரத்தில் யாரையும் குறிப்பிட்டு நான் நோகடிக்க விரும்பவில்லை. எந்த காரணத்திற்காகவும் கட்சி இரண்டாக உடையும் கூடாது. எடப்பாடி பழனிச்சாமி உடன் நான் பேச தயார்.
பிரதமர் மோடி வற்புறுத்தியதால்தான் துணை முதலமைச்சர் பொறுப்பை ஏற்றேன். ஜெயக்குமார் பேசியதால்தான் ஒற்றை தலைமை பிரச்சனை பெரிதானது. எந்தவித அதிகார ஆசை கொண்டவன் நான் அல்ல. என்னை தொண்டர்களிடம் இருந்து ஓரம்கட்டவோ, பிரிக்கவே முடியாது. இயக்கத்தில் நான் இருப்பதே தொண்டர்களை காப்பாற்றுவதற்காகதான். துணை முதலமைச்சர் என்ற பதவிக்கு இந்திய அரசியல் சட்டத்தில் எந்த பிரத்தியேகமான அதிகாரமும் இல்லை, இருந்தாலும் பிரதமர் மோடி ஏற்றுக் கொள்ள வேண்டுமென கேட்டுக் கொண்டதால் ஏற்றுக்கொண்டேன். இதுவரை நல்லாத்தான் போயிட்டு இருக்கு எனக்கே தெரியல எதுக்காக இந்த ஒற்றை தலைமை பிரச்சனை வருதுன்னு, கனவா நனவா என்பது போல இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.