சட்டப்பேரவையில் ஜெய்ஹிந்துக்கு எதிராகப் பேசினேனா..? ஈஸ்வரன் அளித்த பரபரப்பு விளக்கம்..!

By Asianet TamilFirst Published Jun 26, 2021, 9:28 PM IST
Highlights

ஜெய்ஹிந்த் தொடர்பாக நான் பேசியதை வெட்டி அவதூறு பரப்புகிறார்கள் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளரும் எம்.எல்.ஏவுமான ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
 

தமிழக சட்டப்பேரவையில் திருச்செங்கோடு எம்.எல்.ஏ.வும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளருமான ஈஸ்வரன் பேசுகையில், “ஆளுநர் உரையைப் படித்தவுடன் தமிழகம் தலைநிமிர்ந்துவிட்டது. ஒரு வரியில் சொல்ல வேண்டுமென்றால், சென்ற ஆளுநர் உரையைப் பார்த்தேன். கடைசியில் நன்றி, வணக்கம், ஜெய்ஹிந்த் என்று போட்டிருந்தது. ஆனால், இந்த உரையில் ஜெய்ஹிந்த் என்ற அந்த வார்த்தை இல்லை என்பதைப் பதிவு செய்கிறேன்” என்று பேசினார். ஈஸ்வரனின் பேச்சுக்கு பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை உள்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். 
இந்தநிலையில் ஈஸ்வரன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “சட்டப்பேரவையில் ஜெய்ஹிந்த் என்ற வார்தையை பற்றி நான் பேசியதை முழுமையாக கேட்கமால், அதை 15 நொடிகளுக்கு எடிட் செய்து அதன்மூலம் அரசியல் செய்து வருகிறார்கள். நான் மொழி தொடர்பாக இரு அரசின் ஆளுநர் உரையைதான் ஒப்பிட்டு பேசினேன். என்னுடைய உரையை முழுமையாக கேட்டவர்களுக்கு அது தெரிந்திருக்கும். சட்டப்பேரவையில் ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையை ஓங்கி ஒலிக்கிற 17 பேர் உள்ளே இருந்தார்கள். பாஜக உறுப்பினர்கள் 4 பேர் இருந்தனர். அவர்களுக்கெல்லாம் நான் பேசியது தவறாக எதுவும் தெரியவில்லை. ஏனெனில் அவர்கள் என்னுடைய முழு உரையையும் கேட்டனர்.
ஆனால், நான் பேசியதில் சிலவற்றை மட்டும் வெட்டி பரப்புகிறார்கள். நான் பேசி இரண்டு நாட்கள் இதுகுறித்து யாரும் எதுவும் பேசவில்லை. ஆனால், ஒரு குறிப்பிட்ட கட்சியின் ஐ.டி விங் வெட்டி பரப்பிய பிறகுதான் எல்லோரும் பேசுகிறார்கள். இதை பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை தொடங்கிவைத்தது என்பது எல்லோருக்கும் தெரியும். இதுதொடர்பாக சந்தேகம் ஏற்பட்டிருந்தால் என்னிடமே கேட்டிருக்கலாம். பழிவாங்கும் அரசியலை அண்ணாமலை நிறுத்திக்கொள்ள வேண்டும். இதுதொடர்பாக அண்ணாமலையுடன் விவாதிக்கத் தயாராக இருக்கிறேன்” என்று ஈஸ்வரன் தெரிவித்தார்.
 

click me!