
முதல்வர் பழனிசாமியும் துணை முதல்வர் பன்னீர்செல்வமும் 5000 கோடி ரூபாய் மக்களின் வரிப்பணத்திற்கு விரைவில் பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் வந்தே தீரும் என திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ஒவ்வொரு மாவட்டமாக அரசு பணத்தை செலவு செய்து, ஏதோ கனவு பலிக்காது. கானல் நீர் ஆகும் என்றெல்லாம் ஸ்டாலினைப் பார்த்து விமர்சித்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கும் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
ஸ்டாலின் குறிப்பிட்டது போல், ஊழலிலும் கமிஷனிலும் இரட்டைக்குழல் துப்பாக்கியாக செயல்பட்டு, அரசு கஜானாவை தூர்வாரிக் கொண்டிருக்கும் இந்த இரட்டையர்கள் அரசு விழாக்களின் மேடை நாகரீகம் கூட தெரியாமல் பேசியிருப்பது அரசியல் தரம் தாழ்ந்த செயல்.
ஒரு குடும்பத்திடம் சரணாகதி அடைந்து, இடைக்கால பொதுச்செயலாளராக இருந்த சசிகலாவை கைகூப்பி வணங்கி, காலில் விழுந்ததோடு மட்டுமின்றி, அந்தக் குடும்பத்தில் உள்ள கடைக்கோடி வாரிசுகளிடம் கூட கைகட்டி நின்று சேவகம் பார்த்து தங்களுடைய பதவிகளை தக்கவைத்துக் கொண்டனர் இந்த இரட்டையர்கள்.
திடீரென்று ஒரு குடும்பத்திற்காக செய்கின்ற ஆட்சி இந்த ஆட்சியல்ல என்றும், நெஞ்சம் உண்டு நேர்மையுண்டு என்றும் நாகூசாமல் நெல்லையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பேசியிருப்பது நான்கு சுவர்களும் வாய் விட்டுச் சிரிக்கக் கூடிய அளவுக்கு மிகப்பெரிய நகைச்சுவை.
ஓரிரு நாள் மழையைக்கூட தாங்க முடியாமல் சென்னை உட்பட தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் வாழும் மக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஏற்பட்ட இன்னல்களில் இருந்து இன்னும் மக்கள் மீள முடியவில்லை. எந்தவொரு ஆக்கபூர்வமான திட்டங்களை நிறைவேற்றவும் நிர்வாகத் திறமையில்லாத இந்த 'இரட்டையர்கள்' பொதுப்பணித்துறைக்கு பொறுப்பேற்று இருந்த காலம் தான் அந்தத் துறையின் இருண்ட காலம்.
பொதுப்பணித்துறை அமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் இருந்த காலத்தில் கால்வாய்கள் அமைப்பது, தூர்வாருவது, தடுப்பணைகள் கட்டுவது, குளங்கள், ஏரிகள், வெள்ளத் தடுப்பு பணிகள், வெள்ள மேலாண்மைப் பணிகள், கடலோர மாவட்ட பாதிப்புகளை தடுக்கும் பணிகள் என்று ஏறக்குறைய 3500 கோடி ரூபாய் செலவிட்டுள்ளதாக கணக்கு காட்டியிருக்கிறார். இத்தனை ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்ததாக கணக்குக் காட்டியும், வடகிழக்குப் பருவமழையால் கிடைத்த நீரை சேமித்து வைக்கவும் முடியாமல், மக்களுக்கு ஏற்பட்டுள்ள மோசமான பாதிப்பை தடுக்கவும் இயலாத மோசமான நிர்வாகத்தை அளித்திருக்கிறார் இந்த ஓ.பி.எஸ். சேகர் ரெட்டியின் மணல் சாம்ராஜ்யம் ஒன்றை உருவாக்கியது மட்டுமே ஓ.பி.எஸ் காலத்தின் ஒரே சாதனை.
இப்போது புதிதாக ஏரிகளை தூர் வார 300 கோடியும், தடுப்பணைகள் கட்ட 1000 கோடியும் நிதி ஒதுக்கப்போவதாகவும் நெல்லை பொதுக்கூட்டத்தில் வீர வசனம் பேசியிருக்கிறார். ஆக 1300 கோடி ரூபாயில் அடுத்த 'திட்டம்' ரெடி என்பதுதான் முதல்வர் பழனிசாமியின் அறிவிப்பிலிருந்து வெளிப்படுகிறது.
பொதுப்பணித்துறையைப் பொறுத்தமட்டில் இந்த 'இரட்டைக் குழல் துப்பாக்கிகள்' நீர் நிலைகள் தொடர்பான பணிகளுக்காக இப்போது அறிவித்துள்ள 1300 கோடி ரூபாயையும் சேர்த்து, இதுவரை ஒதுக்கப்பட்டுள்ள நிதி 5000 கோடி ரூபாயைத் தாண்டுகிறது. ஆனால் இன்றைக்கு சென்னையும், சென்னை புறநகரும் ஒரு மழைக்கே தத்தளித்து நிற்கிறது. சென்னை புறநகர் குளங்கள் நிரம்பிய குடியிருப்புகளாக காட்சியளித்து, அங்கு உள்ள மக்கள் எல்லாம் சொல்லொணாத் துயரத்தில் சிக்கி துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
வெள்ள அபாயம், கன மழை அபாயம் போன்ற பாதிப்புகளில் இருந்து மக்களை மீட்க இயலாத ஓ.பன்னீர்செல்வமும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், 5000 கோடி ரூபாய் வரிப்பணத்திற்கு விரைவில் பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் வந்தே தீரும் என எச்சரித்துள்ளார்.