தினகரன் தனி ஆள் இல்லை... அமமுகவின் பலே தேர்தல் கால்குலேஷன்!

By Asianet TamilFirst Published Mar 3, 2019, 1:50 PM IST
Highlights

38 தொகுதிகளில் தனித்துப் போட்டி என்று அறிவித்த தினகரன், சில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து மூன்றாவது அணி அமைப்பதற்கான முயற்சிகளிலும் இறங்கியிருக்கிறார். 

தனித்துவிடப்பட்டுள்ள தினகரன், திமுக, அதிமுகவுக்கு மாற்றாக மூன்றாவது அணியைக் கட்டமைக்க முயற்சி செய்துவருகிறார். 
 வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ், இ.யூ. முஸ்லிம் லீக், கொமதேக ஆகிய கட்சிகளுடன் அதிகாரபூர்வமாக தொகுதி உடன்பாடு முடிந்துள்ளது. மதிமுக, இடதுசாரிகள். விசிக போன்ற கட்சிகளுடனான தொகுதி உடன்பாடு நிலுவையில் உள்ளது. இதேபோல அதிமுகவில் பாஜக, பாமக, புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு முடிந்துவிட்டது. தேமுதிக, தாமக போன்ற கட்சிகள் அதிமுக கூட்டணியில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது


ஆர்.கே. நகரில் சுயேட்சையாக வெற்றி பெற்றதால், தங்கள் கட்சியுடன் கூட்டணி அமைக்க பல கட்சிகளும் முன்வரும் என்று அமமுக எதிர்பார்த்தது. ஆனால், மாறாக திமுக, அதிமுக கூட்டணியில் இணையவே பெரும்பாலான கட்சிகள் ஆர்வம் காட்டிவருகின்றன. அமமுகவுடன் கூட்டணி சேர கட்சிகள் ஆர்வம் காட்டியதுபோலத் தெரியவில்லை. எஸ்.டி.பி.ஐ. கட்சியுடன் மட்டும் அமமுக தேர்தல் உடன்பாடு கண்டுள்ளது.
அதே வேளையில் 38 தொகுதிகளில் தனித்துப் போட்டி என்று அறிவித்த தினகரன், சில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து மூன்றாவது அணி அமைப்பதற்கான முயற்சிகளிலும் இறங்கியிருக்கிறார். குறிப்பாக அதிமுக, திமுக கூட்டணியில் எதிர்பார்த்த தொகுதி கிடைக்காமல் அதிருப்தி அடைந்து கட்சிகள் வெறியேறுமா என்று அமமுக காத்திருப்பதாகக் கூறப்படுகிறது. கடைசி கட்டத்தில் அப்படி வெளியேறும் கட்சிகளைக் கூட்டணிக்குள் இழுத்துப் போட்டு மூன்றாவது அணியை அமைக்க தினகரன் திட்டமிட்டுவருகிறார். 


தற்போது தனித்து போட்டி என்று அறிவித்துவிள்ள நடிகர் சரத்குமாரின் சமக, வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமை போன்ற கட்சிகளுடன் தினகரன் பேச்சுவார்த்தை நடத்திவருவதாகவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே இந்திய தேசிய லீக் தலைவர் முகமது சுலைமான் அண்மையில் தினகரனை சந்தித்து தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தினர். சில குறிப்பிட்ட கட்சிகள் இணையும்பட்சத்தில் திமுக, அதிமுக கூட்டணிக்கு மாற்றாக மூன்றாவது அணியை தினகரன் நிச்சயம் கட்டமைப்பார் என்று அக்கட்சி வட்டாரங்கள் உறுதியாகத் தெரிவிக்கின்றன. 

click me!