நாடாளுமன்ற தேர்தல் தேதி இன்னும் ஒரு சில வாரங்களில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தருமபுரி தொகுதி எம்பி செந்தில் குமாருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க கூடாது என அண்ணா அறிவாலயத்தில் தருமபுரி திமுக நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.
திமுகவின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், திமுக சார்பாக ஒருங்கிணைப்பு குழு, தொகுதிப்பங்கீட்டு குழு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், ஒருங்கிணைப்பு குழு ஒவ்வொரு தொகுதி நிர்வாகிகளையும் நேரடியாக சந்தித்து ஆலோசனை மேற்கொண்டது. குறிப்பாக தற்போது தொகுதி நிலவரம், வெற்றி வாய்ப்பு என கேட்டறியப்பட்டது.
அந்த வகையில் நாடாளுமன்ற தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவில் உள்ள அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின், எ.வ.வேலு, ஆர்.எஸ்.பாரதி அடங்கிய குழுவினர் நேற்று மாலை பொள்ளாச்சி மற்றும் தருமபுரி தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
'செந்தில் குமாருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்காதீங்க'
அப்போது பொள்ளாச்சி நிர்வாகிகளுடன் பேசிய திமுக தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவினர் ஒற்றுமையாக செயல்பட்டு தேர்தல் பணியாற்ற வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தினர். இதனை தொடர்ந்து தருமபுரி நிர்வாகிகளுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகிகள் பலர் தற்போது இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமாருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க வேண்டாம் என கருத்து தெரிவித்துள்ளதாக தகவல் வெளியானது.
மேலும் தொகுதியில் வெற்றி வாய்ப்பு தொடர்பாகவும் ஆலோசனை கேட்கப்பட்டது. அப்போது தருமபுரி நிர்வாகிகளிடம் அனைவரும் ஒன்றினைந்து செயல்பட வேண்டும் என திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவினர் கேட்டுக்கொண்டனர். மேலும் தேர்தலில் தவறு செய்யும் நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்ட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படியுங்கள்