
மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வழங்கியதற்கு எதிர்ப்பும், திமுக சிட்டிங் எம்.எல்.ஏ.,வான சரவணனுக்கு சீட் வழங்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை நேற்று மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இதில், மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற டாக்டர்.சரவணனுக்கு இந்த முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. அந்த தொகுதி திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.
இதனால் தற்போதைய திமுக எம்.எல்.ஏ.,வான டாக்டர்.சரவணனுக்கு சீட் வழங்கப்படவில்லை. மேலும், சரவணனுக்கு சீட் வழங்கபடாததை கண்டித்தும், திருப்பரங்குன்றம் தொகுதியினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வழங்கியதை கண்டித்தும் அவரது ஆதரவாளர்களும் திமுக மகளிர் அணியை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். திமுகவிற்கு மீண்டும் திருப்பரங்குன்றம் தொகுதியை ஒதுக்கீடு செய்யவில்லையானால் தேர்தல் பணியை புறக்கணிக்க போவதாகவும் கூறிஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதுகுறித்து திருப்பரங்குன்றம் தொகுதியை சேர்ந்தவர்கள் கூறுகையில், ‘’அனைத்துக்கட்சிகளும், திட்டமிட்டு அகமுடையார்களைப் புறக்கணிப்பதுபோலத் தெரிகின்றது. திருப்பரங்குன்றத்தில் அகமுடையார் பிரதிநிதித்துவம் மீண்டும் பறிபோயிற்று. டெல்டா பற்றி சொல்லவே தேவையில்லை. ஆனாலும், தென்மாவட்டங்களைப் போல அல்லாமல் சிலருக்கு மட்டுமாவது வாய்ப்பு கிடைக்கின்றது.
அகமுடையார் பெரும்பான்மையாக வாழும் மதுரையில் ஒரு தொகுதியை கூட திமுக அகமுடையாருக்கு வழங்கவில்லை. தென்மாவட்டம் முழுக்க ஒரு தொகுதி கூட வழங்கப்படவில்லை. போலியான முக்குலத்தோர் கோட்டாவில் கள்ளர், மறவருக்கு வாரி வழங்கப்பட்டுள்ளது’’ என குற்றம்சாட்டுகிறார்கள். இந்த முறை ராஜன் செல்லப்பா அதிமுக வேட்பாளராக களமிறங்குவதாலும் அங்கு நேரடியாக திமுக தங்களது வேட்பாளரை நிறுத்தாததாலும் ராஜன் செல்லப்பா இங்கு எளிதாக வெற்றிக்கனியை ருசித்து விடுவார் எனக்கூறப்படுகிறது.
விருகம்பாக்கம் தொகுதியில் மீண்டும் தனசேகருக்கு சீட் கொடுக்க வாய்ப்பில்லை. இதனால் அவர் பிரபாகர் ராஜாவுக்கு எதிராக வேலை பார்ப்பார் என்பதால் அதிமுக வேட்பாளர் விருகை ரவி நிச்சயம் வெற்றி பெற்று விடுவார் என்பதால் இரு தொகுதிகளிலும் தில்லாக அதிமுக வேட்பாளர்கள் களமிறங்குகின்றனர்.