சாமியை பக்தர்கள் குழந்தையாகவே பார்க்கின்றனர்.. நீதி மன்றம் கொடுத்த பரபரப்பு தீர்ப்பு.

By Ezhilarasan BabuFirst Published Jun 29, 2021, 9:51 AM IST
Highlights

உள்ளது. அதுபோல கர்ப்பகிரகத்தில் உள்ள சாமியை பகதர்கள் குழந்தையாகவே பார்க்கின்றனர். அதனால் தான் குழந்தையும் தெய்வமும் ஒன்று என்று சொல்கின்றனர் எனவும், கோவில் சொத்துக்களுக்கும் நீதிமன்றமே பாதுகாப்பு எனத் தெரிவித்துள்ளார்.

கோவில்  சொத்துக்களுக்கும், சிலைகளுக்கும் நீதிமன்றமே பாதுகாப்பு எனத் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், பழனி தண்டாயுதபாணி கோவிலுக்கு இங்கிலாந்து ராணியால் தானமாக வழங்கிய நிலத்தை கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க குத்தகைதாரர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி  பாலதண்டாயுதபாணி கோவிலுக்கு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், 1863- ம் ஆண்டு இங்கிலாந்து மகாராணி, தாராபுரம் தாலுகா, பெரியகுமாரபாளையம் கிராமத்தில் உள்ள 60 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கினார். 

ஸ்ரீரங்க கவுண்டர், ராமசாமி கவுண்டர் ஆகிய இருவருக்கு வாடகைக்கு விடப்பட்ட இந்த நிலம், கடந்த 1960 ம் ஆண்டு தமிழ்நாடு இனாம் ஒழிப்புச் சட்டத்தின் கீழ் எடுக்கப்பட்டது. இதை எதிர்த்து ஸ்ரீரங்க கவுண்டரும், ராமசாமி கவுண்டரும்  ஈரோடு நீதிமன்றத்தில் முறையிட்டனர். இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம், நிலத்தின் மீது பழனி பாலதண்டாயுதபாணி கோவில் தேவஸ்தானத்துக்கு மட்டுமே உரிமை உள்ளது என்றும், ஸ்ரீரங்க கவுண்டர் மற்றும்  ராமசாமி கவுண்டர் ஆகியோருக்கு உரிமை இல்லை என்றும் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து ஈரோடு மாவட்ட கோர்ட்டில் செய்த அப்பீல் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதைதை எதிர்த்து ஸ்ரீரங்க கவுண்டரும், ராமசாமி கவுண்டரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்எம்டி. டீக்காராமன், கோவில் கர்ப்பகிரகத்தில் உள்ள சாமிக்கும், அதன் சிலைகளுக்கும், அதன் சொத்துக்களுக்கும் நீதிமன்றமே பாதுகாப்பு எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், நிலத்தை கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என மனுதாரர்களுக்கு உத்தரவிட்ட நீதிபதி, பொதுவாக குழந்தைகளுக்கு நீதிமன்றமே பாதுகாவலர் என்ற சட்டம் உள்ளது. அதுபோல கர்ப்பகிரகத்தில் உள்ள சாமியை பகதர்கள் குழந்தையாகவே பார்க்கின்றனர். அதனால் தான் குழந்தையும் தெய்வமும் ஒன்று என்று சொல்கின்றனர் எனவும், கோவில் சொத்துக்களுக்கும் நீதிமன்றமே பாதுகாப்பு எனத் தெரிவித்துள்ளார். 

click me!