
தமிழக சட்டப்பேரவையின் துணை சபாநாயகரான பொள்ளாச்சி ஜெயராமன் ஒரு டென்ஷன் பேர்வழி. கோபம் வந்தாலும் படபடப்பாகிவிடுவார், அதிக ஆனந்தம் வந்தாலும் படபடப்பாகிவிடுவார். பொதுமேடை என்றும் பார்க்காமல் எமோஷனாகிவிடுவார்.
தனது மகள் திருமணத்தின் போது ஜெயலலிதா இவரது தலைமை விசுவாசத்தை புகழோ புகழென புகழ்ந்துவிட பொள்ளாச்சியாருக்கு மேடையிலேயே வேர்த்து, விறுவிறுத்து படபடப்பு வந்துவிட்டது.
அதேபோல் சமீபத்தில் திருப்பூரில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவின்போது, இவருக்கு மேடையின் முன் வரிசையில் நாற்காலி ஒதுக்கப்படாமல் போக, அந்த மாவட்டத்து அமைச்சர் உடுமலைப்பேட்டை ராதாகிருஷ்ணனுடன் ஆவேசப்பட்டார். அவர் பதிலுக்கு எகிற, இருவருக்குமிடையில் ரசாபாசமாகிவிட்டது. முதல்வர் எடப்பாடியார் வந்துதான் இருவரையும் பிரித்தார்.
இப்பேர்ப்பட்ட பொள்ளாச்சியார் இன்று கோயமுத்தூரில் நடந்த எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழா மேடையில் ஏகத்துக்கும் உணர்ச்சி வசப்பட்டுவிட்டாராம். அதன் வெளிப்பாடாய், ’புரட்சித்தலைவி எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவர் அம்மா’ என்று மாற்றிப்பேசிவிட, மேடையிலிருந்த முதல்வர் உள்ளிட்ட வி.ஐ.பி.கள் முழித்துவிட்டனர். கீழே உட்காந்திருந்தவர்களோ களுக்கென சிரித்துவிட்டனர்.
ஆனால் இதையெல்லாம் புரிந்து கொள்ளும் நிலையில் இல்லாமல் தனக்கும், எம்.ஜி.ஆருக்குமான நெருக்கத்தை சிலாகித்து பேசுவதில் பிஸியாகிவிட்டார் பொள்ளாச்சியார்.
இதே மேடையில் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் ஏக டென்ஷனாகி ஸ்டாலினை வறுத்தெடுத்துவிட்டாராம் ஏகத்துக்கும்.
ஃப்ரீயா விடுங்க பாஸ்!