ஜெயலலிதா மீதான விசுவாசத்தை வெளிக்காட்ட சின்ன மகனை களமிறக்கிவிட்ட ஓபிஎஸ்..!

By vinoth kumarFirst Published Sep 4, 2019, 6:03 PM IST
Highlights

ஜெ.வின் நினைவிடத்தில் மலர் அலங்காரம் செய்யும் பணியை ஓபிஎஸ்ஸின் மகன் ஜெயபிரதீப் வசம் ஒப்படைத்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீதான விசுவாசத்தை வெளிக்காட்ட எடப்பாடி பழனிச்சாமி ஊரில் இல்லாத நேரத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது சின்ன மகனை களமிறக்கி உள்ளார். 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்து இரண்டரை ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அவரது நினைவிடம் முறையாக பராமரிக்கப்படுவதில்லை என்கிற பொருள்படும் வகையில் பூங்குன்றன் தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் கடந்த வாரம் வியாழக்கிழமை பூங்குன்றன் மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தின் படத்தை தன் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

கண்ணீர் வருவதாகக் குறிப்பிட்டு அவர் பதிவிட்டிருந்த அந்தப் படத்தில் ஜெ. சமாதியில் அங்கொன்றும் இங்கொன்றுமாக பூக்கள் மிகச் சிறிதளவே வைக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டியிருந்தார். அடுத்த சில மணி நேரங்களில் ஜெ. சமாதியில் நினைவிடப் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையிலும் ஒரு டீம் உள்ளே சென்று மளமளவென மலர் அலங்காரங்களைச் செய்தார்கள். 

இதுபற்றி பூங்குன்றனுக்கும் உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது மதியம் 2 மணிக்குமேல் அவர் வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில் காலையில் கண்ணீர், இப்போது ஆனந்தக் கண்ணீர் என்று குறிப்பிட்டு ஜெ.வின் சமாதியில் மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்ததைக் காட்சியாகப் பதிவிட்டார்.

மெரினாவில் இருக்கும் கலைஞரின் நினைவிடத்தில் தினம்தினம் ஒவ்வொரு விதத்தில் வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு காண்போரை கவர்ந்து இழுக்கிறது. ஆனால், ஆளும்கட்சியாக இருக்கும் அதிமுகவின், முதல்வராக இருந்து மறைந்த ஜெயலலிதா சமாதியில் மலர் அலங்காரம் செய்வதற்கு யாரும் இல்லை என்ற நிலைமை. இதைக் குறிப்பிட்டுத்தான் பூங்குன்றன் கண்ணீர் வருகிறது என்று குறிப்பிட்டார். 

இந்தப் பதிவைப் பார்த்து சிலர் உடனடியாக துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் கவனத்துக்குக்கொண்டு சென்றனர். அடுத்த சில மணி நேரங்களில் மலர் அலங்காரம் நடைபெற்றுவிட்டது. இனிமேல் ஜெ.வின் நினைவிடத்தில் மலர் அலங்காரம் செய்யும் பணியை ஓபிஎஸ்ஸின் மகன் ஜெயபிரதீப் வசம் ஒப்படைத்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

click me!