
Deputy CM Udhayanidhi reacts on the Enforcement Directorate raids| சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள குறிஞ்சி இல்லத்தில், காலநிலை வீரர்கள் திட்டத்தின் மூலம், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 50 மின் ஆட்டோக்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு துணை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இதில் பங்கேற்று, கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அதேபோல், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறையின் சார்பில் தமிழ்நாடு புதுமைத் தொழில் முனைவோர் திட்டத்தின் (Sustain TN) இணைய முகப்பை, துணை முதல்வர் உதயநிதி தொடங்கி வைத்தார். மேலும், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறையின் சார்பில், சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான பசுமை உட்கட்டமைப்புகளை முழுமையாக செயல்படுத்திய பள்ளிகளுக்கு சான்றுகள் வழங்கப்பட்டன.
அவ்வகையில், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த என். பஞ்சம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி, இடையக்கோட்டை நேருஜி அரசு மேல்நிலைப் பள்ளி, கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த புகளூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த கஞ்சநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு பசுமைப் பள்ளிகளுக்கான சான்றிதழ்கள் தரப்பட்டன.
டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் ரெய்டு நடத்தும் அளவுக்கு ஊழல்! மௌனம் காக்கும் முதல்வர்! சொல்வது யார் தெரியுமா?
சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறையின் சார்பில், கடலோர தமிழகத்திற்கான உயிர்க்கேடய வரைபடங்கள், பாரம்பரிய மீள்திறனுக்கான வேர்கள் - பழங்குடியினரும் காலநிலை மாற்றமும், நிலையான வாழ்விடத்திற்கான சிறந்த நடைமுறைகள் ஆகிய 3 புத்தகங்களை வெளியிட, முதல் பிரதியை அமைச்சர் தங்கம் தென்னரசு பெற்றுக் கொண்டார். அமைச்சர் தங்கம் தென்னரசு, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை செயலாளர் சுப்ரியா சாகு ஐஏஎஸ், மற்றும் அரசு அதிகாரிகள், இதில் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:
ஒன்றிய அரசு தமிழகத்தையும் பெரியாரையும் இழிவு படுத்துவதை கொள்கை முடிவாக செய்கிறார்கள். மும்மொழி கொள்கையை விவகாரத்தில் எங்கள் நிலைப்பாடுகளை, முதல்வரும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும் தொடர்ந்து பதிவு செய்து வருகிறார்கள்.
நாடாளுமன்றத்தில் நாகரிகம் இல்லாமல் தமிழக எம்.பி.க்களை விமர்சிக்கிறார்கள். இதற்கெல்லாம் தமிழ்நாட்டு மக்கள் வாய்ப்பு கிடைக்கும்போது தக்க பதிலடி கொடுப்பார்கள். அமலாக்கத்துறை சோதனையை திசை திருப்பவே, மும்மொழி கொள்கை மற்றும் தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை திமுக கையில் எடுத்துள்ளதாக கூறுவது தவறு.
அமலாக்கத் துறையை அனுப்பியதே ஒன்றிய அரசுதானே. இதெல்லாம், 15 - 20 நாளாக நடக்கக்கூடிய விவகாரம். ஆனால், மும்மொழி கொள்கை, தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் , இது தொடர்பான ஆர்ப்பாட்டம் எல்லாம் அதற்கு முன்பிருந்தே நடத்தி வருகிறோம். ஒன்றிய அரசுதான் திசை திருப்புவதற்கு அமலாக்க துறையை அனுப்புகிறார்கள்.
தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் மற்ற மாநில முதலமைச்சர்கள், அங்குள்ள எதிர்க்கட்சி தலைவர்களுக்கு தமிழக அரசு சார்பில் அழைப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. மார்ச் 22 ஆம் தேதி சென்னையில் மிகப்பெரிய ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. அதற்கு பின் அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும். இவ்வாறு துணை முதல்வர் உதயநிதி கூறினார்.
டாஸ்மாக்கில் 1 லட்சம் கோடி ஊழல்! அமலாக்கத்துறை சோதனைக்கு இவர் தான் காரணமா?