பாஜகவில் இணைந்ததாக சொன்னதால் மன அழுத்தம்... சலூன் கடை மோகன் சங்கடம்..!

By Thiraviaraj RMFirst Published Jun 1, 2020, 1:59 PM IST
Highlights

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியமைக்காக பிரதமர் மோடியிடம் நேற்று பாராட்டை பெற்ற மதுரை சலூன்கடைக்காரர் மோகன் இன்று பாஜகவில் இணைந்ததாக கூறப்பட்ட நிலையில் அவர் அதனை மறுத்துள்ளார். 

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியமைக்காக பிரதமர் மோடியிடம் நேற்று பாராட்டை பெற்ற மதுரை சலூன்கடைக்காரர் மோகன் இன்று பாஜகவில் இணைந்ததாக கூறப்பட்ட நிலையில் அவர் அதனை மறுத்துள்ளார். 

மதுரை, மேலமடை பகுதியை சேர்ந்தவர் மோகன். இவர் அந்தப் பகுதியில் சலூன் கடை நடத்தி வருகிறார். இவரது பூர்வீகம் ராமநாதபுரம் மாவட்டம் என்றாலும் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக மதுரையில் வசித்து வருகிறார். இந்நிலையில், ஊரடங்கால் வருமானமின்றி உணவுக்கு சிரமப்பட்ட தனது பகுதி மக்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காக மகளின் கல்விச்செலவுக்காக சேமித்து வைத்திருந்த 5 லட்ச ரூபாய் சேமிப்பு நிதியை எடுத்து செலவழித்தார்.

மோகனின் இந்த மனிதநேயமிக்க நடவடிக்கை காரணமாக அவருக்கு சினிமா பிரபலங்கள் பார்த்திபன் உள்ளிட்ட பலரும் பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்திருந்தனர். சலூன் கடைக்காரர் மோகனின் மகள் படிப்புச்செலவை இந்தாண்டு தாமே ஏற்றுக்கொள்வதாக நடிகர் பார்த்திபன் அறிவித்தார். சமூக வலைதளங்களில் மோகன் கடந்த 10 நாட்களாக வைரலாகினார்.

இதனிடையே மோகன் குறித்த தகவல் மதுரை மாவட்ட நிர்வாகம் மூலம் பிரதமர் அலுவலகத்திற்கும் சென்று சேர்ந்தது. இந்நிலையில், நேற்றைய தினம் மான் கீ பாத் நிகழ்ச்சியில் வானொலியில் பேசிய பிரதமர் மோடி மதுரை சலூன்கடைக்காரர் மோகனை பாராட்டி பேசினார். அவரின் உதவும் மனப்பான்மையை குறிப்பிட்டு புகழாரம் சூட்டினார்.

பிரதமரிடம் இருந்து பெற்ற பாராட்டு தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும், தன்னால் இயன்ற வரை இன்னும் தனது பகுதி மக்களுக்கு உதவுவேன் எனவும் மோகன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று மதுரை மாநகர் மாவட்ட பாஜக செயலாளர் சீனிவாசன் முன்னிலையில் மோகன் தனது மகள், மனைவி உட்பட குடும்பத்துடன் பாஜகவில் ஐக்கியமாகியுள்ளதாகக் கூறப்பட்டது. இதனை அடுத்து பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் முருகன், மோகனை தொடர்பு கொண்டு பாராட்டு தெரிவித்தார். உள்ளூர் பாஜக நிர்வாகிகள் மோகனின் வீட்டுக்கு சென்று வாழ்த்து தெரிவித்தனர். அப்போது மாவட்டத் தலைவர் கே.கே சீனிவாசன் தலைமையில் மோகன் குடும்பத்துடன் பாஜகவில் இணைந்ததாக பாஜக தரப்பில் கூறப்பட்டது.

இந்நிலையில், மோகன், ’’தான் பாஜகவில் சேரவில்லை. வாழ்த்து அட்டை என நினைத்து பாஜக உறுப்பினர் அட்டையை பெற்றுக் கொண்டேன். நான் அனைத்து கட்சிக்கும் பொதுவான நபர். என்னை எந்த கட்சிக்குள்ளும் அடைக்க வேண்டாம். பாஜகவில் இணைந்ததாக செய்திகள் வெளியானதால் எனக்கு மன அழுத்தம் ஏற்பட்டிருக்கிறது’’என தெரிவித்துள்ளார். 

click me!