
தமிழகத்தில் இது வரை டெங்கு காய்ச்சலால் 400 பேர் உயிரிழந்துள்ளதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆனால் தமிழக அரசு உயிரிழந்தோரின் எண்ணிக்கையை குறைத்துக் காட்டுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னையில் உள்ள கொளத்தூர் தொகுதியில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் இன்று ஆய்வு செய்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெங்கு காய்ச்சல் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகளை கேட்டறிந்ததாக தெரிவித்தார்.
டெங்கு காய்ச்சலுக்கு, 10 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அரசு ஒப்புக் கொண்டுள்ளதற்கு நன்றி தெரிவித்த ஸ்டாலின், தமிழகத்தில் இதுவரை, டெங்குவால் பாதிக்கப்பட்டு, 400 பேர் இறந்து இருக்கலாம் என எங்களுக்கு தகவல் வந்துள்ளது என தெரிவித்தார்.
ஆனால் டெங்கு காய்ச்சலுக்கு, இது வரை 26 பேர் தான் இறந்துள்ளதாக அரசு தவறான தகவல்களை பரப்பி வருகிறது என ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு நாள்தோறும் 10 பேர் உயிரிழந்து வருவதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டார்.