டெங்கு உயிரிழப்பை மறைக்க மக்களிடம் அபராதமா? முத்தரசன் காட்டம்!

First Published Oct 22, 2017, 12:08 PM IST
Highlights
Dengue fever has lost the state - Muthurasan


டெங்கு காய்ச்சலில் அரசு தோற்றுப்போய் விட்டதை அரசு மூடி மறைப்பதற்காக சோதனை என்ற பெயரால் அபராதம் விதித்து வருகிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் குற்றம் சாட்டியுள்ளார்.

சேலத்தில் அவர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், குஜராத் மாநிலத்தில், தேர்தல் வருவதால் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கடி செல்வதாக கூறினார். 

பான், குட்கா விவகாரத்தில் ரூ.89 கோடிக்கான ஆதாரத்தை வருமான வரித்துறை கைப்பற்றியது. ஆதாரம் கிடைத்த நிலையில் முதலமைச்சர் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனை எடுக்காமல் தேர்தல் நடத்துவது என்பது மீண்டும் அதேபோன்ற ஒரு ஜனநாயக படுகொலையை நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் உடன்படுகிறது என்று பொருள்படும் என்றும் அவர் கூறினார்.

தேர்தல் தேதி அறிவிக்கப்படாமல் அரசின் சார்பில் பல்வேறு சலுகைகளை அறிவித்து வாக்குகளை பெறுவதற்கான முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது.

தற்போது தமிழகத்தில் மக்கள் பாதிப்படைந்திருப்பது டெங்கு காய்ச்சல். தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் அதிகம் பேர் உயிரிழந்திருப்பது சேலம், எடப்பாடியில்தான் என்பது அனைவரும் அறிந்தது.

தமிழகத்தில் டெங்கு பாதிப்பால் தினசரி 10 முதல் 15 பேர் வரை உயிரிழந்து வருகிறார். டெங்குவைக் கட்டுப்படுத்துகிறோம் என்று அமைச்சர்கள் பேட்டி அளித்து வருகின்றனர். 

தற்போது டெங்கு காய்ச்சலில் அரசு தோற்றுப்போய் விட்டதை அரசு மூடி மறைப்பதற்காக சோதனை என்ற பெயரால் அபராதம் விதித்து வருகிறது என்று அவர் குற்றம் சாட்டினார்.

கடந்த காலங்களில் தமிழகத்தில் பல்வேறு காய்ச்சல் வந்துள்ளது. ஆனால், தற்போது அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் மனித உயிர் இழப்பு ஏற்பட்டு வருகிறது.

click me!