
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் தளம் சமீப காலமாக புது ரத்தம் பாய்ச்சப்பட்டதுபோன்ற உத்தவேகத்துடன் செயல்பட்டுவருவது அரசியல் அரங்கில் புருவத்தை உயர்த்த வைத்து இருக்கிறது.
நம் நாட்டில் அரசியல் தலைவர்களில் அதிகமான “பாலோவர்ஸ்” பிரதமர் மோடிக்குதான் இருக்கிறது. இருந்தபோதிலும், சமீபகாலமாக, மோடியின் ஒவ்வொரு செயலுக்கும் மிகச்சூடாக எதிர்வினையாற்றி ராகுல்காந்தி பெயரில்வரும் டுவிட்கள் காங்கிரஸ் ஆதரவாளர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்று இருக்கிறது.
அதிகமான புதிய உறுப்பினர்கள் ராகுல் காந்தியின் டுவிட்டர் பக்கத்திலும் இணைந்து இருக்கிறார்கள், எண்ணிக்கையும் கூடியிருக்கிறது. இதை காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடக தலைவர் திவ்யா ஸ்பந்தனா தெளிவாக ஒருபேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சூழலில் ராகுல்காந்தியின் அதிரடி டுவிட்களுக்கும், கூர்மையான கருத்துக்களுக்கும் பின்புலத்தில் இது ராகுல்காந்தியின் அலுவலகத்தில் இருந்துதான் டுவிட் செய்யப்படுகிறதா அல்லது “ஆட்டோமேட்டிக் ரோபாட்கள்” மூலம் டுவிட்கள் செய்யப்படுகிறதா என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது.
கடந்த 15-ந்தேதி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பாகிஸ்தான்-அமெரிக்கா உறவை புதுப்பிப்பது குறித்து, புகழந்து டுவிட் செய்து இருந்தார். இந்த டுவிட்டுக்கு பதில் அளிக்கும் வகையில், ராகுல்காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் “ மோடிஜி சீக்கிரம், அமெரிக்க அதிபர் டிரம்பை மற்றொரு முறை கட்டிஅணைக்க அவசியம் வந்துவிட்டது” என்று பதிவிட்டு இருந்தார்.
இந்த டுவிட்களுக்கு ரீவிட்கள் 20 ஆயிரத்தையும், இப்போது 30 ஆயிரத்தையும் கடந்து சென்று கொண்டு இருக்கிறது.
இதில் விஷயம் என்னவென்றால், ராகுல்காந்திக்கு செய்யப்பட்ட ரீடுவிட்கள் பெரும்பாலனவற்றில் ரஷிய, கஜகிஸ்தான், இந்தோனேசிய வார்த்தைகளின் அமைப்பில் ரீவிட் டுவிட் செய்தவர்கள் பெயர்கள் அமைந்து இருக்கின்றன. அதாவது ரோபாட்கள் மூலம் சர்வதேச அளவிலான நிகழ்வுகள் ஆய்வுக்கு தரப்பட்டு அதன் மூலம் கருத்துக்களை ரான்டம் அடிப்படையில் குறிப்பிட்ட 10 பேரின் பெயரில் பதிவிடப்படுகிறதா என்ற சந்தேகத்தையும் எழுப்பி இருக்கிறது.
அமெரிக்காவின் கேம்பிர்ட்ஜ் நகரில் உள்ள கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா என்ற புள்ளிவிவர ஆய்வு நிறுவனத்துடன், காங்கிரஸ் கட்சி தனது சமூக ஊடகத்தை இணைத்து செயல்படுகிறது என்ற செய்திகள் தற்போது வரத் தொடங்கியுள்ளன. அதாவது, சமூக ஊடகங்கள் மத்தியில் ஆதரவாளர்களையும், இளைஞர்களையும் ஈர்க்க அரசியல் நிகழ்வுகளுக்கு ஏற்ப உடனுக்குடன் டுவிட் செய்ய இதுபோன்ற ஆய்வு நிறுவனங்கள் உதவுகின்றன.
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்புக்கு பல்வேறு மாநிலங்களில் களஆய்வு செய்து, ஒவ்வொரு மாநிலத்துக்கு ஏற்றார்போல் டுவிட்களை பதிவிட இந்த கேம்பிர்ட்ஜ் டேட்டா அனாலிட்டிக் நிறுவனமே உதவியது என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடகத்தின் புதியதலைவர் திவ்யா ஸ்பந்தனாவிடம் கேட்டபோது, “ டுவிட்டரில் ஒருவர் கருத்துக்கு மற்றொருவர் ரீவிட் செய்தால், அதை நாங்கள் கட்டுப்படுத்த முடியாது. இதை டுவிட்டர் நிறுவனத்திடம் தான் கேட்டு தெளிவுபடுத்த வேண்டும்” எனத் மழுப்பலாக தெரிவித்தார்.
டுவிட்டரில் போலியான பாலோவர்ஸ் அல்லது ரோபாட்களைக் கொண்டு ரீடுவிட்கள் செய்ய வைப்பது என்பது ஒன்றும் புதிதானது அல்ல. கடந்த 2013ம்ஆண்டே ரோபாட்கள் மூலம் ரீவிட்கள் செய்யப்படுவது குறித்து தி நியூயார்க் டைம்ஸ் நாளேட்டில் கட்டுரை வந்ததுள்ளது.
ஆதலால், ராகுல்காந்தியின் டுவிட்களுக்கு பின்புலத்தில் யார் இருக்கிறார்கள் என்பது புரியாத புதிர்தான்.