மக்களவையில் நடந்ததுதான் ஜனநாயக படுகொலை.. கண்ணீர்விட்ட வெங்கையா நாயுடுவிற்கு தமிழக எம்.பி பதில்..!

By Asianet TamilFirst Published Aug 11, 2021, 9:45 PM IST
Highlights

அமளியால் அவையின் புனிதத்தன்மை அழிந்துவிட்டதாகக் கூறிய மா நிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவிற்கு, ‘மக்களவையில் நடந்ததுதான் அசலான ஜனநாயகப் படுகொலை’ என்று தமிழக எம்.பி. சு.வெங்கடேசன் பதிலளித்துள்ளார்.
 

பெகாசஸ் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக மனம் வெறுத்துப்போன மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு, அவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நடந்துகொண்ட விதம் குறித்து உருக்கமாக பேசினார். “உறுப்பினர்களின் செயல்பாடு எல்லை மீறிவிட்டது. சில உறுப்பினர்கள் மேஜை மீது அமர்ந்தும், சிலர் மேஜைகளில் ஏறியும் அமளியில் ஈடுபட்டதால் அவையின் புனிதத்தன்மை அழிந்துவிட்டது” என்று அவைத்தலைவர் கண்ணீர் மல்க பேசினார். வெங்கையா நாயுடுவின் இந்தக் கருத்துக்கு தமிழக எம்.பி. சு.வெங்கடேசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இன்று மாநிலங்களவையில் ஜனநாயகத்தின் விழுமியங்கள் பற்றி வெங்கையா நாயுடு கண்ணீர் மல்க பேசியுள்ளார். மக்களவையில் நடந்ததுதான் அசலான ஜனநாயகப் படுகொலை என்பதை அவரும் அறிந்திருப்பார். 150-க்கும் அதிகமான எதிர்க்கட்சி உறுப்பினர்களின் குரல் கேட்கப்படாமலேயே 19 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. மக்களின் அடிப்படை சுதந்திரத்தையும், கண்ணியத்தையும் சீர்குலைத்துள்ள பெகாசஸ் பற்றி ஒரு நிமிடம் கூட விவாதிக்க மறுத்து, 19 மசோதாக்களை விவாதமே இன்றி நிறைவேற்றி, அறிவிக்கப்பட்ட தேதிக்கு முன்பே கூட்டத்தொடரை முடித்துவிட்டது ஒன்றிய அரசு.
நாடாளுமன்றம் என்ற மதிப்புமிகு அவையை கேலிப் பொருளாக ஆக்கி இருக்கிறது ஆளுங்கட்சி. எங்கள் குரல்கள் ஏன் கேட்கப்படவில்லை? இது என்ன ஜனநாயகம் என்று நாங்கள் கேட்கிறோம். கட்சி சாராத நடுநிலை பொறுப்பு வகிக்கும் வெங்கையா நாயுடு எங்கள் உரிமைக்காகவும், ஜனநாயகத்திற்காகவும் கொஞ்சம் பேச வேண்டும் என கேட்கிறோம். 6 ஆவது கூட்டத்தொடர் ஜனநாய படுகொலையின் சான்று” என வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
 

click me!